ஞாயிறு, 28 ஜனவரி, 2018

​“நாளை திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம்!” : மு.க.ஸ்டாலின் January 28, 2018

Image

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேறு எந்த மாதிரியான போராட்டம் மேற்கொள்வது என்பது பற்றியும் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்டு மாநில துணைச்செயலர் வீரபாண்டியன், சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். எனவே, திட்டமிட்டப்படி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் எனவும் தெரிவித்தார். அரசின் நிலைப்பாட்டை பார்த்து மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.