செவ்வாய், 16 ஜனவரி, 2018

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை January 16, 2018

Image

எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீற முயற்சிப்பதாகவும் அதனை இந்திய ராணுவம் தடுத்து வருவதாகவும் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லையில் அமைதியை பராமரிக்க இது உதவாது என அந்நாடு எச்சரித்துள்ளது. 

ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தரைப்படடை தளபதி பிபின் ராவத், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கவனத்தை திசை திருப்பிவிட்டு அந்த நேரத்தில் தங்கள் நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார். 

அவர்களுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பாடத்தை கற்பித்து வருவதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார். இந்திய சீன எல்லையில் தொடர்ந்து பிரச்சினை நிலவுவதாகக் கூறிய ராணுவ தளபதி சீன வீரர்கள் இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீற முயற்சிப்பதாகவும் அதனை இந்திய ராணுவம் தடுத்து வருவதாகவும் கூறினார். 

இதற்கிடையே இந்திய ராணுவ தளபதியின் இந்த பேச்சு ஆக்கப்பூர்வமற்றது என்றும் எல்லையில் அமைதியை பேணிக்காக்க உதவாதது என்றும் சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் லூ காங்க் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி இடையே எல்லையில் அமைதியை பேணுவதற்கு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைக்கு எதிரானது பிபின் ராவத் பேச்சு என்றும் லூ காங்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.