
நடப்புக் கல்வியாண்டில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ற வகையில், தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. பாடத்திட்டக்குழு தயார் செய்த பாடத்திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனை கேட்கப்பட்டது.
அதனடிப்படையில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துக்களும் கேட்கப்பட்டு முறையாக தொகுக்கப்பட்டன. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்கு இந்த புதிய பாடத்திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கும் போது வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கும் இந்த பாடத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.