கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை சிறைபிடித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, கூட்டாட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க கோரி 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு கொல்கத்தா வந்தனர். ஆனால், அவர்களை மாநில போலீஸார் சிறை பிடித்தனர். இதையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, முதல்வர் மமதா பானர்ஜி சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார், உலகிலேயே மிகச்சிறந்த காவல் ஆணையர், என்றும் பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், திட்டமிட்டு தம்மை அவமதிப்பதாக மமதா குற்றம்சாட்டினார். சிபிஐ மூலம் தங்களை மிரட்ட முடியாது எனவும், பாஜக அரசு மேற்குவங்கத்தை துன்புறுத்தி வருவதாகவும், மமதா பானர்ஜி விமர்சித்தார். மேலும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக விடிய விடிய தொடர் தர்ணா போராட்டத்தில் மம்தா ஈடுபட்டார்.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மேற்கு வங்கம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, கூட்டாட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி தனது தர்ணா போராட்டத்தை 2வது நாளாக மமதா பானர்ஜி தொடர்ந்து வருகிறார். தலைமைச் செயலகம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் மமதாவுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்ணா நடைபெறும் பந்தலிலேயே அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தும் முதல்வர் மமதா பானர்ஜி, அரசியல் நிலவரத்தை கேட்டறிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source: ns7.tv