மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மூன்று நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன் போராட்டத்தை விலக்கி கொண்டார்.
சாரதா நிதி நிறுவனம் மற்றும் ரோஸ்வேலி நிதி நிறுவனங்கள் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா சென்றனர். அப்போது உள்ளூர் காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசியல் சாசன அமர்வை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தொடுத்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆணையர் ராஜீவ் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய கூடாது என்றும் கட்டாய வாக்குமூலம் பெற கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டதையடுத்து தன் போராட்டத்தை கைவிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டுள்ளது எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.