இந்தூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்று அதில் இருந்து உயிர் தப்பிய 8 வயது சிறுமியின் புனர்வாழ்விற்காக முந்தைய பாஜக அரசால் கொடுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு தற்போதைய மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் நிர்பந்தித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சாரில் கடந்த ஆண்டு ஜூன் 26ல் 8 வயதான சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வெளியே வந்தபோது கடத்திச் செல்லப்பட்டு பள்ளி அருகில் உள்ள புதர் அருகே இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலில் பேரில் அங்கு வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காஷ்மீரின் கத்துவா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் நடந்தேறிய இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்திய நிலையில், வழக்கை விரைந்து விசாரித்த நீதிமன்றம் ஜூலை 2018ல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
இந்தூர் மருத்துவமனையில் 5 மாத கால சிகிச்சைக்கு பின்னர், ஓரளவு இதில் இருந்து அச்சிறுமி மீண்டு பள்ளிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவரது ஒரு கண்ணில் பார்வை இன்னமும் திரும்பவில்லை.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு புனர்வாழ்விற்காக பல உதவிகளை அப்போதைய பாஜக அரசாங்கம் அளித்தது. சொந்தமாக வீடு, சிறுமியின் தந்தைக்கு கடை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தங்களது பள்ளிப்படிப்பை படிக்க ஏதுவாக அந்தப் பகுதியில் உள்ள முன்னணி பள்ளி ஒன்றில் இலவச கல்வி ஆகியவைகளை அப்போதைய முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வழங்கினார்.
இதனிடையே மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசாங்கம் புதிதாக பதவியேற்றது. ஆட்சி மாற்றத்தால் பாஜக அரசாங்கம் அளித்த உதவியை தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது. வாய்மொழி உத்தரவாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் கடை மற்றும் வீட்டை காலி செய்யுமாறு இந்தூர் நகராட்சியினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மீண்டும் சோகத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். பாதிப்பிலிருந்து இன்னமும் சிறுமி மீளவில்லை என்றும் அவரது கல்விக் செலவை எவ்வாறு ஏற்க முடியும் என அவரது தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தூர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, முந்தைய அரசாங்கம் வெளியிட்ட இந்த அறிவிப்பு அலுவல் ரீதியாக பின்றப்படாததால் சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களால் வீட்டை முறைப்படி அளிக்க அதிகாரம் இல்லை என்றார்.
இந்த நடவடிக்கை குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறும்போது, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்ப்பதை தவிர்த்துவிட்டு உணர்வூப்பூர்வமாக அனுகவேண்டும் என்றார்.
source : ns7.tv