சனி, 9 பிப்ரவரி, 2019

கோடநாடு விவகாரம்: சயான் மற்றும் மனோஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு! February 09, 2019


Image
கோடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் வாளையாறு மனோஜின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால், அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜாமீனில் வெளியே இருக்கும் சயான், வாளையாறு மனோஜ் இருவரும், இந்த வழக்கில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, கோத்தகிரி காவல்துறையினர், கடந்த 19-ஆம் தேதி, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி, இருவரது ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார். 
மேலும், விசாரணைக்கு ஆஜராகாத தீபு, பிஜின்குட்டி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதையடுத்து, சயான், மனோஜ் ஆகியோரை பிடிக்க, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தீபு மற்றும் பிஜின்குட்டியை கைது செய்யவும் போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
source: ns7.tv