2018 தமிழக பட்ஜெட்டை திவாலாக்கும் பட்ஜெட் என்று அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், 2019 பட்ஜெட்டை மென்மையாக கடந்து போயுள்ளார். நாடாளுமன்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதால், பட்ஜெட்டை ராமதாஸ் மென்மையாக விமர்சித்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பட்ஜெட் வெளியான பிறகு, தமிழக கட்சிகள், அதனை கடுமையாக விமர்சித்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே, நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அத்துடன், நிற்காமல், பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள், குறித்து, அதில், அறிவிக்கப்படாத திட்டங்களை கடுமையாக விமர்சித்தும், ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைப் பார்த்த ராமதாஸ் உச்சகட்ட கோபத்திற்கே சென்று, திவாலாக்கும் பட்ஜெட் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ராமதாசின் இந்த கடும் கோபத்திற்கு, 2018-19 பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறையும், மாநிலக் கடனும் அதிகரித்திருந்ததே பிரதான காரணம்.
இப்படி கடந்த காலங்களில், பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மென்மையாக கடந்து போயுள்ளார் என்பது, அவரின் அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது. இங்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பட்ஜெட்டை எப்படி அணுகுகிறார் என்பது பற்றிய விமர்சனம் அல்ல. ஆனால், அவர் என்ன காரணத்திற்காக 2018 பட்ஜெட்டை திவாலாகும் பட்ஜெட் என்றும் - 2019 பட்ஜெட்டை மென்மையாக கடந்து போயுள்ளார் என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
2018 பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை 18 ஆயிரம் கோடி ரூபாயாகவும், மாநிலத்தின் கடன் 3.14 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதுவே, பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த பட்ஜெட்டை திவாலாக்கும் பட்ஜெட் என விமர்சித்தார். ஆனால், 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அதைவிட அதிமனான கடனும், நிதிப்பற்றாக்குறையும் உள்ளது. துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன், 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு, ராமதாஸ் மென்மையாக அணுக வேண்டிய அவசியம் என்ன, என்ற கேள்வி எழும்போது, நாடாளுமன்ற கூட்டணியே பிரதான காரணமா என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக - பாமக இடம்பெற உள்ளதாக யூகங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான, உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதால், அதற்கான வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு கடந்து போக முடியாது. இந்நிலையில், அதிமுக அரசின் பட்ஜெட் மீதான மென்மையான விமர்சனம் - கூட்டணி உறுதியாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற யூகத்தையும் எழுப்பிச் செல்கிறது.
எது எப்படி இருந்தாலும், ராமதாஸ் பாணியிலேயே இதற்கு பதிலளிக்க வேண்டுமென்றால், கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வரத்தானே செய்யும்...
source: ns7.tv