வியாழன், 7 பிப்ரவரி, 2019

திராவிடக் கட்சிகளின் அழைப்பிற்காக காத்து நிற்கும் பிராந்திய கட்சிகள்...! February 07, 2019

Image
திராவிட கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று அறிவித்து வந்த சில கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக - அதிமுகவின் அழைப்புக்காக காத்திருக்கின்றன.
திமுக - அதிமுக கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன.  அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி செல்ல திராவிட கட்சிகளே காரணம் - அதனால், அக்கட்சிகளோடு இனி கூட்டணியே கிடையாது.... இந்த வார்த்தையை விடுதலை சிறுத்தைகள் - காங்கிரஸ் - தமிழ் மாநில காங்கிரஸ் - கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே ஏறத்தாழ உச்சரித்து விட்டன.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இன்றைய சூழலில், எந்த திராவிடக் கட்சிகளுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அரசியல் கட்சிகள் உச்சரித்தனவோ, அந்த திராவிடக் கட்சிகளின் அழைப்பிற்காக காத்து நிற்கின்றன தமிழக கட்சிகள்...
தேமுதிக ஒரு திராவிடக் கட்சி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாலும், பெரும்பாலான அரசியல் வாதிகள் அந்த வட்டத்தில், அக்கட்சியை சேர்த்துக்கொள்ளுவது இல்லை... திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக தொடங்கப்பட்டாலும், அக்கட்சி அதிமுகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டிய காலச்சூழல் ஏற்பட்டது. சட்டப்பேரவையில், தேமுதிகவின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பற்ற வைத்த நெருப்பு - ஜெயலலிதாவுக்கும் - விஜயகாந்திற்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. தேமுதிகவில் இருந்த, சந்திர குமார் இன்று - திமுகவில் உள்ளார். அதிமுகவோடு இனி கூட்டே கிடையாது என அறிவித்த தேமுதிக, தற்போது, நாடாளுமன்ற தேர்தலில், அக்கட்சியை நெருங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
தேமுதிகவுக்கு அடுத்தபடியாக, திமுக - அதிமுக ஆட்சியால், தமிழகம் முன்னேறவில்லை என கடுமையாக விமர்சித்த கட்சி பாஜக... சில மாதங்களுக்கு முன்பு வரை, ((மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் என)) திராவிட கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சித்தவர்கள், தற்போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று தற்போது கூற முடியுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் மௌனமாக கடந்து போனதே இதனை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. 
இதே போல், ஊழல் கட்சிகள், மதுவிலக்கை அமல்படுத்திய கட்சிகள், தமிழகத்தின் எதிர்காலத்தை சீரழித்தது திராவிடக் கட்சிகள் என பட்டிதொட்டியெல்லாம் முழங்கியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்... மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கொள்கையோடு, தமிழக அரசியலில் வலசை வந்த, ராமதாஸ், கத்தரிக்காய் முற்றினால், கடை வீதிக்கு வந்தே தீரும் எனக் கூறுகிறார். வெளிப்படையாக அறிவிக்காதது, அதிமுகவுடன் - பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 
கூடங்குளம், நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே, பழைய பகையை மறந்து திமுகவோடு  கைகோர்த்துள்ளன. தொகுதி பங்கீடு மட்டும் தான் முடிவாகவில்லை என்றாலும், திமுகவின் நெருக்கத்தில், கம்யூனிஸ்டுகள் இருப்பது வெளிப்படை...
எந்த திராவிட கட்சிகளால், தமிழகம் வளர்ச்சி அடையவில்லை என்று விமர்சித்தனவோ அதே கட்சிகளோடு தேமுதிக - பாமக- பாஜக - கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைக்க ஆயத்தமாவது வரலாற்று முரண் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/7/2/2019/regional-parties-waiting-dravidian-parties-call