வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் வயல்வெளிகள்...! January 31, 2019

Image
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு புண்ணியம் நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலம் அமைந்துள்ளது. இதன் அருகே வயல்வெளிகள் உள்ளன. இங்கே திடீர் திடீரென தீப்பிடித்து எரிகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இப்படி எரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் யாரேனும் அமிலத்தை கொண்டு வந்து கொட்டிச் சென்றார்களா அல்லது பூமிக்கு அடியில் இருந்து தீ குழம்புகள் மணலுடன் கலந்து வருவதால் தீப்பிடித்து எரிகிறதா என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது 13 வயது மகன் அந்தப் பகுதியில் இலந்தை பழம் பறிக்கச் சென்றான். அப்போது மணல் தீப்பற்றியதால் காயமடைந்த அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதேபோல் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பன்றி தீப்பிழம்பில் சிக்கியதால் கருகி சாம்பலானது. இதனால் பீதியில் உறைந்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் மக்கள் மற்றும் கால்நடைகள் எதுவும்  சென்றுவிடாதவாறு கருவேல முள் செடிகளால்  அரண் அமைத்துள்ளனர். அங்கே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் இப்படி தீப்பற்றி எரிவதன் காரணத்தை அறியாமல் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
திடீர் திடீரென மணல் தீப்பிடிப்பது எரிவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வட்டாட்சியர் லட்சுமணன் கோரிக்கை வைத்துள்ளார். மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இன்னும் தீ அடங்காமல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. உரிய சோதனை நடத்தி உண்மையை உலகிற்குக் கொண்டுவந்தால் மட்டுமே பொதுமக்களின் அச்சம் விலகும். 

source:  ns7.tv