எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 165 படகுகளில் பயன்படுத்தத்தக்கதாக நல்ல நிலையில் இருந்த 48 படகுகளை இந்திய மீட்பு குழுவினர் மீட்டு தாயகம் திரும்பி வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மட்டும் தமிழக மீனவர்களின் 165 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு கேட்டுக் கொண்டதையடுத்து, இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்டியிருந்தன. இதனையடுத்து, நல்லிணக்க அடிப்படையில் அந்தப் படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருந்தது.
பின்னர், இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கு, இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் தலைமையில் படகு மீட்புக்குழுவினர் இலங்கைக்கு சென்றிருந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்ற படகு மீட்புக்குழுவினர் இந்த இரண்டு வாரங்களும் இலங்கையில் தங்கியிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படகுகளை பார்வையிட்டனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 165 படகுகளில் 48 படகுகள் மட்டுமே நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. அதற்கடுத்து அந்த 48 படகுகளையும் படிப்படியாக இரண்டு வாரங்களுக்குள் மீட்டுள்ளனர். இவ்வாறு அந்த 48 படகுகளையும் மீட்டுக் கொண்டு படகு மீட்புக் குழுவினர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, காரைநகர் மற்றும் கிளிநொச்சி பூநகரி, கிராஞ்சி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்தே இந்தப் படகுகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
source ns7.tv