புதன், 1 ஏப்ரல், 2020

டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை டார்கெட் செய்வதா?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்திருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த 57 நபர்களில் 50 பேர் டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மர்காஸில் கலந்து கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தமிழகத்தில் இருந்து மட்டும் மொத்தம் 1131 பேர் இந்த நிஜாமுதீன் கூட்டத்தல் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 515 பேரை மட்டுமே தமிழக அரசு இதுவரை கண்டறிந்துள்ளது. மீதமுள்ளவர்களை உளவுத்துறை மூலமாக கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

அவர்களில் சிலர் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்று சமூக தளங்களில் சிலர் பதிவிட சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சர்ச்சை பதிவுகளுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, “COVID ஐ விட இப்போது மிகவும் பயங்கரமான விஷயம் என்னவென்றால், சில முட்டாள்கள் அதை வகுப்புவாதமாக்குகிறார்கள். முட்டாள்களே, இந்த வைரஸுக்கு எந்த மதமும் இல்லை, எந்த மதத்தையும் பார்க்கவில்லை, கடவுளுக்கு அஞ்சவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டிலேயே இருங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, கொரோனாவை எதிர்த்து மக்கள் ஒருமித்துப் போராடும் நிலையில், சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய்க் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மிகக் குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசன் முதல் ஆண்டி வரை மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் தாக்கும் வல்லமை கொண்ட கொடிய நோய்க் கிருமியாக கொரோனா அமைந்துள்ளது. தமிழகத்தில் இந்த நோய் பாதிப்புடன் காஞ்சிபுரம், சென்னை, கோவை, நெல்லை, திருப்பூர் முதலிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும் தப்லீக் குழுவின் தொடர்பினால் இந்த நோய்த் தொற்றைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை, சேலம், ஈரோடு முதலிய மாவட்டங்களில் கொரோனா நோயின் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத் எனப்படும் மதக்குழு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்பது உண்மைதான். இவர்கள் அனைவரும் ஒரே மதத்தினர் என்பதும் இவர்களால் வேறு எந்த மதத்தினரும் பாதிக்கப்படவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை.
இந்தக் குறிப்பிட்ட மதக் குழுவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள், தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உட்பட முஸ்லிம் சமூகச் சான்றோர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி அதன் காரணமாக 99 விழுக்காட்டினர் மருத்துவப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இந்த உண்மைகளையெல்லாம் நன்கு தெரிந்த தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது மட்டும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் போல் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

கொரோனாவை எதிர்த்து அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்து மக்கள் போராடிக் கொண்டும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் இருக்கும் நிலையில் சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறேன்” என்று தனது அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.