வியாழன், 16 ஏப்ரல், 2020

தனித்தனியாக கொரோனா வார்டு: அரசு மருத்துவமனை சர்ச்சை

அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில், கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க முடிவின்படி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் ரதோட் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில், கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 1200 படுக்கைகள் மத அடிப்படையில் வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் ஹெச் ரதோட், மாநில அரசாங்க முடிவின்படி, ஒரு வார்டு இந்து நோயாளிகளுக்கும் மற்றொரு வார்டு முஸ்லிம் நோயாளிகளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அம்மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல் அது பற்றிய எந்த தகவல்களையும் மறுத்தார்.
டாக்டர் ரதோட் கூறுகையில், “பொதுவாக மருத்துவமனையில் ஆண்கள் வார்டு பெண்கள் வார்டு என்று தனியாக இருக்கும். ஆனால், இங்கே நாங்கள் இந்து, முஸ்லிம் நோயாளிகளுக்கு தனியாக வார்டுகளை உருவாக்கியிருக்கிறோம்” என்று கூறினார். இது போல தனியாக பிரிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, “இது அரசாங்கத்தின் முடிவு என்பதால் நீங்கள் அவரக்ளைத்தான் கேட்க வேண்டும்” என்று டாக்டர் ரதோட் கூறினார்.
மருத்துவமனையில் சேர்க்கும் நெறிமுறையின்படி, பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருக்கும் வரை, கொரோனா இருப்பதாக சந்தேகத்திற்குரிய நோயாளிகளை, கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளிடமிருந்து பிரித்து தனி வார்டில் வைக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் என்று இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 186 பேர்களில் 150 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகள். இந்த 150 பேர்களில் குறைந்தபட்சம் 40 பேர் முஸ்லிம்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து துணை முதல்வர் நிதின் படேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையி, “மத நம்பிக்கை அடிப்படையில் வார்டுகள் பிரித்திருப்பது போன்ற முடிவு பற்றி எனக்கு தெரியவில்லை. பொதுவாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வார்டுகள் உள்ளன. நான் அதைப் பற்றி விசாரிக்கிறேன்” என்று கூறினார்.
அஹமதாபாத் மாவட்ட ஆட்சியர் கே.கே.நிரலாவும் இந்த விஷயத்தில் எந்த தகவலும் தெரியாது என்று மறுத்தார். “எங்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் கொடுக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அரசாங்க முடிவும் எங்களுக்குத் தெரியாது” என்று அஹமதாபாத் மாவட்ட ஆட்சியர் நிரலா கூறினார்.
அஹமதாபாத் சிவில் மருத்துவமனையின் புதிய கட்டடம் மார்ச் கடைசி வாரத்தில் அஹமதாபாத்-காந்திநகர் மண்டலத்திற்கான கொரோனா மையமாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஒரு நோயாளியை தொடர்புகொண்டபோது, அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “ஞாயிற்றுக்கிழமை இரவு, முதல் வார்டில் (ஏ -4) அனுமதிக்கப்பட்ட 28 ஆண்களின் பெயர்கள் அழைக்கப்பட்டன. பின்னர், நாங்கள் வேறு வார்டுக்கு (சி -4) மாற்றப்பட்டோம். நாங்கள் ஏன் மாற்றப்படுகிறோம் என்று எங்களிடம் கூறப்படவில்லை. இருப்பினும், அழைக்கப்பட்ட பெயர்கள் அனைத்தும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவை. நாங்கள் இன்று எங்கள் வார்டில் உள்ள ஒரு ஊழியரிடம் பேசினோம், இது ‘இரு சமூகத்தினரின் வசதிக்காக’ செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.” என்று தெரிவித்தார்.