திங்கள், 6 ஏப்ரல், 2020

சீனா தொடுத்த கிருமி யுத்தமா கொரோனா?

உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் புதிய வெளிச்சத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்’ என்ற வாசகத்துடன் 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவு ‘விதியுடன் நிச்சயிக்கப்பட்ட சந்திப்பு’ உரையில் குறிப்பிட்டு சுதந்திர இந்தியாவை துலக்கினார் நேரு.

நேருவின் அறிவிப்பின்போது, உலக வரலாற்றின் மாபெரும் மக்கள் இடப்பெயர்ச்சி இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையே நடந்துகொண்டிருந்தது. சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளில், இந்தியா சந்தித்திருக்கும் மாபெரும் சுகாதாரப் பொருளாதார பேரழிவான கொரோனா தொற்று அச்சத்துக்காக, மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு, இந்தியாவை முடங்கியிருக்க மோடி அழைப்பு விடுத்தபோது, கொரோனா தொற்றின் மூலத்தளமான சீனா, தங்கள் நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதாக அறிவித்தது.
மோடியின் ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு இந்தியாவின் மாபெரும் உள்நாட்டு மக்கள் பெயர்ச்சி நடந்துவருகிறது. அதேநேரம், கொரோனா தொற்று ஊற்றெடுத்த உகான் நகரில் மக்கள் சாலைகளில் சாதாரணமாக நடமாடத் தொடங்கியிருக்கின்றனர். நேரு குறிப்பிட்டதைப் போல, இதுவும் விதியுடன் நிச்சயிக்கப்பட்ட சந்திப்பு தான்.
ஏப்ரல் 8ம் தேதி முதல், உகான் மாநகரில் வழக்கமான போக்குவரத்தும், பயணங்களும் அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது ஹுபெய் மாகாணம். மார்ச் 10ம் தேதி, சீன அதிபர் ஜூ ஜின்பிங் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கையசைத்தார்.
உகான் நகரமும், சீன தேசமும் தொற்று அச்சத்திலிருந்து விடுதலை மூச்சுவிடத் தொடங்கிய அதேநேரத்தில், உலகின் மாபெரும் நாடுகளில் ஒன்றான இந்தியா தன்னை முடக்கிக்கொண்டது. அதேநாள், அமெரிக்கா இருதயத்தை அழுத்தும் வலியால் பீடிக்கப்பட்டிருந்தது. ஸ்பெயின் அழுதுகொண்டிருந்தது. ஜெர்மன் தவித்தது. ஆயிரக்கணக்கான மரணங்களுடன், இறந்தவர்களை மரியாதையாக அடக்கம்கூட செய்ய முடியாத இத்தாலியின் சோகம் வார்த்தைகளுக்குள் அடங்காததாக மாறியிருந்தது.
ஜனவரி 24ல் தொடங்கி – மார்ச் 24வரை, 60 நாட்களுக்குள், சீனாவில் முடிவுக்கு கொரோனா யுத்தம், இன்னும் 18 மாத காலம் உலகம் முழுக்க நீடிக்கக்கூடும் என அச்சப்படுகிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள்.
இடைப்பட்ட இந்த 60 நாட்களில் நடந்தது என்ன?
டிசம்பர் 1ம் தேதி.ஹுனான் நகரில் உள்ள கடல் உணவுச் சந்தைக்கு சென்று வந்த நபர் ஒருவர் மூச்சுத்திணறல் காய்ச்சலோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட நிமோனியா போன்ற அறிகுறியுடன் இருந்த அவருக்கு, ஏற்கனவே கல்லீரல் பிரச்னையும், வயிற்றுக் கட்டியும் இருந்ததால் எதனால் அவருக்கு நிமோனியா ஏற்பட்டது என மருத்துவர்களால் அறியமுடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில், ஹூனான் நகரில் உள்ள கடல் உணவுச் சந்தைக்கு சென்று வந்த மேலும் 4 பேர் அதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர்; இதனால், கடல் உணவுச்சந்தையிலிருந்தே தொற்று பரவியிருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தனர் மருத்துவர்கள். ஆனால், 6வது நாள் அன்று, புதிதாக பெண் ஒருவர் அதே அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் கடல் உணவுச் சந்தைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அனுமதிக்கப்பட்ட பெண் வேறு யாரும் இல்லை; முதன்முதலாக தொற்றால் பாதிக்கப்பட்டவருடைய மனைவி !
கடல் உணவுச்சந்தைக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர், ஆனால் கடல் உணவுச்சந்தைக்கு சென்றுவந்த ஒருவருடன் சம்பந்தமுள்ள ஒருவர், ஒரே நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதும், ஏதோ விபரீதமாக நடக்கிறது என உள்ளூர அறிந்தது மருத்துவத்துறை. ஆனால், சீன அரசோ, சுகாதாரத்துறையோ அதை உறுதிப்படுத்தவில்லை.
விளைவு?
டிசம்பர் 2வது வாரத்தில் ஏராளமான நபர்கள் ஒரேமாதிரியான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். மருத்துவமனைகளில் குழப்பமும், அச்சமும் பரவிக்கொண்டிருந்தபோதே, நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் அதே அறிகுறியுடன் நோய்த்தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவருக்கும் நிமோனியாவுக்கான சிகிச்சை போதுமானதாக இருக்கவில்லை. சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் தோன்றியது. ஏன் ஒரே சமயத்தில் பலர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய அளவு நிமோனியாவை ஒத்த சுவாசக் கோளாறுடன் மர்ம காய்ச்சலோடு நோய் படுகிறார்கள். மருத்துவர்கள் திகைத்தனர். எதோ ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது என டிசம்பர் 12 முதல் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், அது மனிதருக்கு மனிதர் பரவக்கூடியது என மருத்துவர்கள் நினைக்கவில்லை. ஏனெனில், அந்த நோயாளிகளில் பலர் அந்த கடல் உணவுச்சந்தைக்கு சென்று வந்தவர்கள். இதனால், விலங்குகளிடம் இருந்துதான் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நம்பினர் மருத்துவர்கள்.
ஆனால், முன்னர் எப்போதும் அறிந்திருக்காத, புதிய தொற்றுநோய் தோன்றி இருக்கலாம் என்ற கருத்து டிசம்பர் 21 மெல்லமெல்ல வலுப்பெறத் துவங்கியது. ஏனெனில், டிசம்பர் 21 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதி பேர் கடல் உணவுச்சந்தையோடு எந்தத்தொடர்பும் இல்லாதவர்கள்.
டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 தேதிகளில் முறையே 5, 4, 3, 8 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்து சேர்ந்தனர். தொண்டைக் குழி, மூக்கு மற்றும் நுரையீரலில் குவிந்துள்ள திரவத்தை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தனர். ஏற்கனவே தெரிந்த எந்த வித நோய் கிருமியும் இல்லை. ஆனால், ஒரே மாதிரியான நோய் அறிகுறி மட்டும் இருந்தது.
சில ஆண்டுகள் முன்னர் இதுபோல தான் சார்ஸ் என்ற சுவாச கோளாறு நோய் அதுவரை அறியப்படாத கரோனா வைரஸால் பரவியது. அத்தகைய ஒரு வைரஸ் தான் இப்போதும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை வலுவடைந்தது.
ஆனால், நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதை ஒழிப்பதில் சீன அரசும், அதன் சுகாதாரத் துறையும் தேங்கி நின்றன. ஏனெனில், மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் வல்லமையுள்ள வைரஸ்தான் தற்போதைய நோய்க்கு காரணம் என்பதை சீனா ஏற்கவில்லை.
இந்நிலையில், டிசம்பர் 30ம் தேதி லீ வென்லியாங் என்ற மருத்துவர், ‘சார்ஸ் போன்ற மனிதத்தொற்று நோய்’ பரவி வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அப்படி பதிவிட்டதற்கு காரணம் இருந்தது, ஏனெனில் லீ வென்லியாங்கும் தொற்றுக்கு ஆளாகி இருந்தார். ஆனால், டிசம்பர் 31ம் தேதி சீனா வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும், ஆனால், அது மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்றும் மறுத்துவிட்டது.
சர்வதேச சுகாதார அமைப்பு (WHO) டிசம்பர் 31 ஆம் தேதி சீனாவில் இனம் காணப்படாத புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்று உலகநாடுகளுக்கு அதிகார பூர்வமாக அறிவிப்புச்செய்தது. ஜனவரி ஒன்று வரை மொத்தம் 59 நோயாளிகளுக்கு மர்ம காய்ச்சல் பரவியிருந்தது. அவர்களில் பலரும் கடல் உணவுச்சந்தைக்கு சென்று வந்தவர்கள்.
நோய் பரவலைத் தடுக்க நோய் மூலத்தைத் தெரிந்துகொள்வது மருத்துவத்துறையில் அடிப்படை.
சுமார் 1.6 கோடி மக்கள் தொகைகொண்ட உகான் மாநகரம் முழுவதும், நோய் பரவுவதைக் கண்ட மருத்துவர்கள் நோய் பரவல் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். தொற்றுநோய் பரவி தான் நோய் ஏற்பட்டது என்றால் நோயாளிகள் இடையே ஏதாவது தொடர்பு இருக்கவேண்டும்.
காலராவைத்தடுக்க, பொது பயன்பாட்டில் இருக்கும் எந்த நீர் ஆதாரத்தில் காலரா கிருமி இருக்கிறது என கண்டுபிடித்து அந்த நீரை எடுப்பதை தடை செய்வதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.அதே அடிப்படையில், ஜனவரி ஒன்று ஹூனான் கடல் உணவு இறைச்சி சந்தையை மூட உத்தரவிட்டது சீன அரசு. ஆனால், மனிதரிடமிருந்து மனிதருக்கு நோய் பரவுகிறது என்கிற சந்தேகத்தை சீன அரசு ஏற்கவில்லை. அச்சந்தேகத்தை எழுப்பிய, தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவரான லீ வென்லியாங்கிடம் ஜனவரி 3 மன்னிப்பு கடிதம் வாங்கியது சீன அரசு. இந்நிலையில், நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தம் புதிய வைரஸைக்’ கண்டறிந்துவிட்டதாக அறிவித்த சீனா, அதற்கு ‘நோவல் கொரோனா’ என பெயரிட்டு, ஜனவரி 7ம் தேதி, அந்த வைரஸின் மரபணுத்தொடர் வெளியிடப்பட்டது. மரபணு தொடரை ஆராய்ந்தபோது வௌவால்களிடம் இருந்த ஒரு ரக கரோனா வைரஸ் தான் மனிதனிடம் தாவி தகவமைத்துக் கொண்டு நோயை ஏற்படுத்தும் ரகமாக பரிணமித்துள்ளது என தெரியவந்தது.
இதுவரை சீனாவில், தொற்றினால் எந்த மரணமும் நிகழ்ந்திருக்கவில்லை; மனிதர்களிடையே பரவக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை சீனாவும் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஜனவரி 9, 2020 இந்த நோயால் ஏற்பட்ட முதல் மரணம் நிகழ்ந்தது. இறந்தவர், டிசம்பர் 1 முதன்முதலாக நோய்த்தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்.
இறந்தவரின் பெயர் ஸெங் !
முதல் இறப்புக்குப் பிறகும், மனிதரிடமிருந்து மனிதருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியத்தை சீன அரசு மறுத்தது. சீன அரசு அளித்த நம்பிக்கையில், சீன தேசமே, சீன புத்தாண்டுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், உகான் நகரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சீனா முழுக்க பயணப்படத் துவங்கினர்.
விளைவு, ஜனவரி 13 தாய்லாந்தில், சீனாவைத்தாண்டிய முதல் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், ஹுனான் கடல் உணவுச்சந்தைக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. சந்தேகம் வலுத்த நிலையில், ஜனவரி 14 ஜப்பானில் அடுத்த தொற்று பதிவானது.
நிலைமையின் ச்தீவிரத்தை உணர்ந்த சீன அரசு ஜனவரி 15, 2020 அன்று, ‘கொரோனா தொற்று மனிதருக்கு மனிதர் பரவாது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது’ என பின்வாங்கியது.
ஜனவரி 20ம் தேதி அன்று, முதன்முதலாக, மனிதரிடமிருந்து மனிதருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சீனா. அறிவிக்கப்பட்ட மறுநாள் அமெரிக்காவில், முதல் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உகான் நகரிலிருந்து உலகம் முழுக்கச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மூலமாக, உலகின் பலநாடுகளுக்கு கொரோனா ஏற்றுமதி ஆகியிருந்தது.
கண்டங்களைத்தாண்டி வைரஸ் பரவியிருந்த நேரத்தில், ஜனவரி 23, காலை 10 மணிக்கு, உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான, உகான் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நோய்த்தொற்று ஏற்பட்ட டிசம்பர் 1ம் தேதி முதல், ஜனவரி 23ம் தேதி உகான் நகரை மூடும்வரையிலான 55 நாட்கள் சீன அரசின் சுணக்கமான நடவடிக்கைகள் உலகம் முழுக்க பலத்த சந்தேகங்களை எழுப்பியது.உலகநாடுகளின் மீது சீனா தொடுக்கும் ‘கிருமி யுத்தமா – கொரோனா தொற்று’ என்ற சந்தேகம் வலுவடைந்தது.
உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் மீது வசைச்சொற்களும், சமூக அருவருப்பும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ‘கிடைத்தையெல்லாம் திங்கும் சீனர்கள்’ என களத்திலும், வலைதளங்களிலும் சீனர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.
உலகத்தின் சந்தேகக் கண், சீனர்கள் சந்திக்கும் பண்பாட்டு வெறுப்பு, உள்நாட்டில் பரவிவரும் அச்சம் என நெருக்கடிகளுக்கு இடையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிட்டது சீன அரசாங்கம். ஜனவரி 25, சீனப்புத்தாண்டு அன்று ஊடகங்களில் தோன்றி உரையாற்றிய சீன அதிபர் ஜூ ஜின்பிங், வேறு எதையும்விடவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டமே தற்போது முதன்மையானது என அறிவித்தார். ஆனால், சீனர்கள் மிக்ககடுமையான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் திணறிக்கொண்டிருக்கும்போது சீனா மட்டும் எப்படி தப்பித்தது என இன்றைக்கு உலகம் கருதுவது போல, மிக எளிதாக ஒன்றும் சீனா அதைத்தாண்டி வந்துவிடவில்லை.
மிகப்பெரும் தொழில் நகரான உகான் நகரம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் நிரம்பி வழிந்தன. புத்தாண்டு கொண்டாட்டம் உறைந்தது. நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.
நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மருத்துவர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகள் போதுமான அளவில் இல்லை. பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கையாள போதுமான மருத்துவமனைகள் இல்லை. நோய்த்தொற்றை சோதிப்பதற்கோ, உறுதிசெய்வதற்கோ சோதனை உபகரணங்கள் போதுமானதாக இல்லை. சோதனை முடிவுகள் வெளிவர நாட் கணக்கில் ஆகும் என்று இருந்த சூழல் நோயாளிகளை எப்படி கையாள்வது என்கிற குழப்பத்தைத் தோற்றுவித்தது.
இப்படி, இன்று உலகநாடுகள் சந்திக்கும் அனைத்து சிக்கல்களையும் நோய்த்தொற்றின் மூல இடமாக இருந்த சீனாவும் எதிர்கொண்டது.
ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொள்வதற்கான மனதிடமும், உண்மையான அர்ப்பணிப்பும் சீன அரசிடமும், மருத்துவத்துறையிடமும், மக்களிடமும் இருந்தது. முறையான திட்டமிடல்களால், சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது சீனா.
புல்மபெயர் தொழிலாளர்கள், ஊரைவிட்டு வெளியேறுவதைத்தடுத்து, இருப்பிடத்தையும், உணவையும் உறுதி செய்தது அரசாங்கம். தடையை மீறி வெளியே வருபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
உகான் நகரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாள், 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு மருத்துவமனை போதாது என்பதால், 1600 படுக்கைகள் கொண்ட இன்னொரு மருத்துவமனைக்கான பணிகள் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்கப்பட்டது. உலகமே வியக்கும் வண்ணம், வெறும் 10 நாட்களுக்குள் இரண்டு மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டன.
சுமார் 30000 மருத்துவர்கள் சீனா முழுவதும் இருந்து, ஹூபெய் மாகாணத்தில் குவிக்கப்பட்டனர். ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெல்லும்வரை வேறு பணிகள் இல்லை’ என மருத்துவர்கள் சூளுரைத்து வீடியோக்கள் வெளியிட்டனர்.
மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில், மருந்து உற்பத்தித்துறை முடுக்கிவிடப்பட்டது.
ஒவ்வொரு மருத்துவருக்கும் தொடர்ச்சியாக 6 மணிநேரம் பணி. பணி நேரத்தில் கழிப்பறை பயன்படுத்தினால், சீன மதிப்புக்கு 300 ரூபாய் பெறுமானமுள்ள பாதுகாப்பு உடைகள் வீணாகிவிடும் என்பதால் ஒரு ஷிப்ட் முடியும் வரை கழிப்பறைக்குக்கூடச் செல்லாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பணியாற்றியுள்ளனர்.
பாதுகாப்பு உடை அணிவதற்கு முன்பு, வயிறு முட்ட சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இடையில் சாப்பிட நேரம் இருக்காது.
மருத்துவமனைகளுக்குள் நோயாளிகளுக்கான யுத்தம் என்றால், மருத்துவமனைக்கு வெளியில் நோய் உடனான யுத்தம் நடந்தது. ஹூபெய் மாகாணத்தில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்குச் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிமக்கள் சோதிக்கப்பட்டனர். நோய் அறிகுறியுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பொதுமக்களை, மருத்துவ பணியாளர்கள் பரிசோதனைக்காக சந்திக்கும்போது, ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலையும், எரிச்சலையும் கொட்டித்தீர்த்தனர் மக்கள். பணி அழுத்ததோடு மக்களின் வசைகளையும் சேர்த்து வாங்கிக்கொண்டே பணி செய்தனர் ஊழியர்கள்.
ஜனவரி இறுதியில், உகான் நகரம், ஹூபெய் மாகாணத்துக்கு வெளியே, பிற மாகாணங்களிலும் நோய்த்தொற்று கடுமையாக இருந்தது. ஆனால், உகான் நகரம் மூடப்பட்ட பிறகு, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் சீனா முழுவதும் நோய்த்தொற்றின் அளவு கடுமையாக குறைந்திருந்தது.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும்பங்காற்றியுள்ளது. நோய்த்தொற்று தீவிரமடைந்த நேரத்தில், நோயாளிகளால் மருத்துவர்கள் தொற்றுக்கு ஆளாவதும் அதிகரித்தது. மருத்துவர்களிடம் பரவிய அச்சம் சிகிச்சை நடவடிக்கைகளை பாதித்தது. இதனால், அடிப்படையான சிகிச்சைகளைத் தவிர நோயாளிகளுக்கு உணவளிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பிற பணிகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
பொது இடங்களில் ‘கொரோனா வைரஸ் தொற்று’ இருந்தால், அதை தன்னுடைய சென்சார் கருவிகளால் உணர்ந்து மக்களை எச்சரிக்கும் நடமாடும் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. ஊரடங்கு நேரத்தில் முக்கிய தொழில் உற்பத்திகள் பாதிக்கப்படாமல் இருக்க, இயந்திரங்கள் பற்றி ப்ரோகிராம் செய்யப்பட்ட கேமரா கண்கள் கொண்ட ரோபோக்கள் மூலம், தொழிற்சாலை இயந்திரங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, மிகக்குறைந்த பணியாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் நடத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அதிவிரைவாக தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவம் களமிறக்கப்பட்டது.
லட்சக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால், முறையாக வழிகாட்ட Mobile App அறிமுகமானது. இந்த Mobile app-ல் பகிர்ந்துகொண்ட தகவல்கள் தான், சீனா மிக விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உதவியுள்ளது. நோய் அறிகுறியுள்ளவர்களை தனிமைப்படுத்தி பராமரிக்க, மைதானங்களும், பொது விடுதிகளும் பயன்பாட்டுக்கு வந்தன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பயன்பட்ட மைதானங்களிலும், விடுதிகளிலும் போதுமான கழிப்பறைகளும், சுத்தமும் உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், பிற நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது சீன அரசாங்கம். ஆனாலும், கேன்சர் நோயாளிகளும், ஆட்கொல்லி நோயாளிகளும் போதுமான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மரணிக்கத்தான் செய்தார்கள். மாதக்கணக்கில் தாங்கள் பராமரித்து நோயாளிகள், ஒரு அசாதாரணமான சூழலில் மரணிப்பதைக் கண்டு கண்ணீர் விட்டனர் மருத்துவர்கள்.
மணிக்கணக்கில் நோயாளிகளை பராமரித்துவிட்டு, வீட்டிற்கு செல்லும் நேரத்தில் லிப்ட்டிலும், ரோட்டிலும் மருத்துவர்கள் மயங்கி விழும் காட்சிகள் வெளியாகின.
திருமணமான இரண்டே ஆண்டுகளில், கொரோனா தொற்றுக்கு எதிராக உழைத்த மருத்துவர் ஜோடியில், நோயாளியிடமிருந்து கணவன் நோய்த்தொற்றுக்குள்ளாகி மூன்றே வாரத்தில் இறந்துபோன படங்கள் வெளியாகின.
செரிமான கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடைய நோயாளி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிந்தும், தொடர்ந்து சிகிச்சை அளித்த சியா எனும் மருத்துவர் இறந்துபோன காட்சிகள் வெளியாகின.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஒருவர், தன் மகளைக் கட்டிப்பிடிக்க முடியாமல், காற்றில் கைகளை விரித்து அழும் காட்சிகள் வெளியாகின.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளைக் காப்பாற்றுங்கள் என நடுரோட்டில் தாய் ஒருவர் கண்ணீர்விட்டு அழும் அளவிற்கு, மற்ற நோயாளிகளை பராமரிக்க முடியாது கொரோனா சீனாவில் கோரத்தாண்டவமாடும் காட்சிகள் வெளியாகின.ஆனால், இவை ஏதும் சீனா மீதான சந்தேகக் கண்ணை மாற்றவில்லை.
1981ல் அமெரிக்காவைச் சேர்ந்த டீன் கோட்ஸ் எழுதிய ‘The eyes of darkness’ புத்தகத்தில் குறிப்பிடப்படும் ‘Wuhan virus 400’ தான் கொரோனா என்றும், வைரஸ் ஆய்வுகளுக்கு புகழ்பெற்ற உகான் நகரில் திட்டமிட்டு சீனா அவற்றை உருவாக்குகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதார வலுவை ஒடிக்க, சீனா செய்த சதிதான் கொரோனா என்று விவாதிக்கப்படுகிறது.
டிசம்பர் 1ம் தேதிதான், முதல்முறையாக இப்படி ஒரு தொற்று நோய் பரவியதாக பரவலாக செய்திகள் உள்ளன. ஆனால், தங்களுடைய ஆய்வின் மூலம், நவம்பர் 17ம் தேதியே இத்தகைய நோயாளிகள் வந்துள்ளனர் என்கிறது South China Morning Post-ன் செய்திக்குறிப்பு !
நூற்றாண்டு புகழ்பெற்ற இந்த செய்தி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான சீன அரசின் போராட்டத்தில், மிகப்பெரும் தொழில்நுட்ப உதவிபுரிந்த அலிபாபா நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது கவனிக்கத்தக்கது !
இப்படியான சந்தேகங்கள், உலகம் முழுவதும் பிரளயம் போல பரவி கதிகலங்கும் இந்த தொற்றுநோய் ஒரே ஒரு நபர் மூலம் ஏற்பட்டு இருக்குமா? தன் பொருளாதார லாபத்துக்காக உலகோடு விளையாடுகிறதா சீனா? என்கிற சந்தேகங்கள் வலுவாக எழுப்பப்படுகின்றன.ஆனால், இந்த சந்தேகத்துக்கு நிகழ்காலத்தில் விடை இல்லை; வரலாற்றில் இருக்கிறது.
டைபாய்டு மேரி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மேரி மலான் 1883-ல் அயர்லாந்திலிருந்து தனது பதினைந்தாம் வயதில் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தார். செல்வந்த குடும்பங்களில் சமையல் வேலை செய்து வந்தவர் மேரி. அமெரிக்காவிலிருந்து அயர்லாந்துக்கு குடிபெயர்ந்த மேரி வேலை செய்த ஏழு குடும்பங்களிலும் டைபாய்டு நோய் ஏற்பட்டு 50 பேர் மரணம் அடைந்தனர். பின்னர் தான் மேரி மலான் மூலமே இந்த கிருமி பரவி அந்த குடும்பங்களில் மரணம் ஏற்பட்டது என தெரிய வந்தது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும், கிருமித்தொற்றை சுமந்து பிறருக்குக் கடத்துபவராக இருந்தபோதும், மேரி அக்கிருமியால் இறக்கவில்லை. பின்னாளில் மேரி, டைபாய்டு மேரி என வழங்கப்பட்டார்.
இப்போது கொரோனா தொற்று 10 வயதுக்குட்பட்ட குழந்தைளிடம் குறைவாக பரவி வருவது உலகம் முழுக்க செய்தியாகியுள்ளது. குழந்தைகளும் கொரோனா சுமப்பாளிகள் (Virus carriers) தான். ஆனால், பெரிய விகிதத்தில் இறப்போ, நோய்த்தீவிரமோ குழந்தைகளிடம் நேரவில்லை. இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு சிறப்பாக இருப்பதன் விளைவாக நோய்த்தொற்று குறைவாக இருக்கலாம் என்கிற கணிப்பையும், குழந்தைகளின் தடுப்பூசி காலமான 10 வயதுக்குட்பட்டவர்களிடம் நோய்த்தொற்று குறைவாக இருப்பதையும் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை நோக்கி ஆய்வுகள் அடுத்தக்கட்டம் நகரலாம்.
2014ஆம் ஆண்டு : மேற்கு ஆப்பிரிக்காவில் 11,310 உயிர்களை குடித்த எபோலா வைரஸ் தொற்றுநோய் பரவல் கினி குடியரசில் ஒரு இரண்டு வயது குழந்தையிடமிருந்து துவங்கியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிக அரிதாக இருந்த எபோலா வைரஸ், ஒற்றை மரபணுப் பிறழ்ச்சி காரணமாக நான்கு மடங்கு தீவிரமாக தாக்கும் மிகபயங்கர கொள்ளை நோயாக மாறியது என்கின்ற ஆய்வுகள்.
இன்றளவும் ஆண்டுக்கு 20 மில்லியன் தொற்றையும், 23 ஆயிரம் இறப்புகளையும் ஆண்டுதோறும் உருவாக்குக்கும் Super Bug என்கிற NDM 1 எனப்படும் சூப்பர் பக் பாக்டீரியா டெல்லியில் தான் அடையாளம் காணப்பட்டதும். அதீத ஆண்டிபாயாட்டிக் பயன்பாட்டால் உருவாகும் NDM-1 இன்று மனிதர்களே இல்லாத ஆர்ட்டிக் கண்டம் வரை பரவியுள்ளது. தலைமுறைக்கணக்கில் நடந்த பரிணாம அழுத்தத்தால் உருவான இந்த பாக்டீரியாவை, இந்தியா திட்டமிட்டு பரப்பியது என சொல்ல முடியுமா?
அதுபோலத்தான் வௌவாலில் வாசம் செய்யும் கரோனா வைரஸ் வகை தான் மனிதரிடம் தாவி நாவல் கரோனா வைரஸாக பரிணமித்துள்ளது. கொரோனா பரவல் என்பது எதோ ஒரே இரவில் நடந்ததல்ல. மனிதர்களிடம் பரவுவதற்கு முன்பாக, பல்வேறு பரிணாம மாற்றங்களை அந்த வைரஸ் அடைந்திருக்கும் என்பதே அறிவியல்.
வௌவாலிலிருந்தே வைரஸ் தொற்று உருவானது என்கிற செய்தி வெளியானதும், சீனப் பெண் ஒருவர் சமைத்த வௌவால் இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு இது கோழிக்கறியைவிட சுவையாக உள்ளது என கூறும் வீடியோ உலகம் முழுவதும் பரவியது. சீனர்களின் விசித்திரமான உணவுப் பழக்கம் தான் இந்த புதிய நோய் தோன்ற காரணம் என்ற புரளி உருவாகி சமூக வலைத்தளத்தில் பரவ துவங்கியது.
ஹூஹான் கடல் உணவுச்சந்தையிலோ, சீனாவிலோ பதிவு செய்யப்படவில்லை. அந்த வீடியோ. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பலோவ் தீவுக்கு சென்ற ஊடக தொகுப்பாளர், 2016ம் ஆண்டு வீடியோ அது. சமைக்கப்பட்ட உணவில் வைரஸ் இருக்காது என்பது அடிப்படை அறிவியல், அது கொரோனாவுக்கும் பொருந்தும் என ஆய்வு செய்யப்பட்டவிட்டது. எனவே, இந்த நோய்க்கும், சீனர்களின் உணவுப்பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை !
கொரோனா ஒரு ஆய்வக உற்பத்தி ஆட்கொல்லி வைரஸா என்ற கேள்விக்கு, ஆய்வகத்தில் ஒரு ஆட்கொல்லி வைரஸை உருவாக்கினால், அதன் மரபணுத்தொடரில் முந்தைய வைரஸ்களின் மாதிரிகளை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த கொரோனாவின் மரபணுத்தொடரில் அப்படியான மாதிரிகள் ஏதும் இல்லை என்கின்ற RNA மரபணு ஆய்வுகள்
14ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிளேக் பரவலில், 20% மக்கள் தொகையயை இழந்த இங்கிலாந்துதான், அடுத்த இரண்டு நூற்றாண்டில் உலகையே ஆட்டிப்படைக்கும் பேரரசாக உயர்ந்தது.
1896 – 1939 வரையிலான 45 ஆண்டுகாலத்தில், மூன்றாவது ப்ளேக் பாதிப்பிற்கு இந்தியாவிலும், சீனாவிலும் சுமார் 1.2 கோடி பேர் இறந்துபோனார்கள். ஆனால், 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்பின்போது வெறும் மூன்றே மாதத்தில் இந்தியாவில் மட்டும் 1.2 கோடி இறந்துபோனார்கள். முதலாம் உலப்போரில் மிஞ்சிய ஆயுதங்களின் நச்சுக்காற்றை இந்தியர்களை அழிப்பதற்கு, பிரிட்டிஷ் அரசாங்கம், நச்சுக்காற்றை பரப்பியதால்தான், மக்கள் செத்தார்கள் என்று அன்றைக்கு கிசுகிசுத்தார்கள்.
ஆனால் அந்த ஸ்பானிஷ் காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தாத பிரிட்டிஷ் மீதான கோபம் தான், இந்தியர்கள் சுதந்திரத்தை நோக்கி தீவிரமாக முன்னேற உந்தியது என்கிறன ஸ்பானிஷ் காய்ச்சலின்போது, இந்தியாவில் பணியாற்றிய மருத்துவர்களின் குறிப்புகள்.
எனவே, தொற்றுநோய்க்கு பிறகான காலத்தில் நாடுகள் எழுவதும் வீழ்வதும் அந்தந்த நாடுகளின் திட்டமிடல்களிலும், தலைமைத்துவத்திலுமே இருக்கிறது என்பதே வரலாறு.
ஏனெனில், பாக்டீரியாவையும், வைரஸையும் கிருமியாக பார்த்தால் அது அறிவியல்; ஆயுதமாக பார்த்தால் அது போர் !
மக்களுக்குத் தேவை அறிவியல் தானே ஒழிய, போர் அல்ல !
credit indianexpress.com