credit ns7.tv
கடந்த ஒரே வாரத்தில் தமிழகத்தில் 3 புலிகளும், தமிழக எல்லையோரக் கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு புலியும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் புலி இரண்டும் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இதேபோல், கேரள மாநிலம் வயநாடு குறிச்சியாட் வனப்பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை அறிந்த கேரள வனத்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரல்லா நீரோடை அருகில் புலி ஒன்று இறந்துகிடந்ததைப் பார்த்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அதில், இறந்தது சுமார் 5 வயது மதிக்கத்தக்க புலி என்பதும், இறந்து 5 நாள்கள் இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர். மேலும், புலியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பாலினம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் படி உதவி கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நான்கு புலிகளின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.