செவ்வாய், 14 ஏப்ரல், 2020

மிளகு விவசாயிகள் வேதனை!

Image
ஊரடங்கு உத்தரவினால் கொடைக்கானல் கீழ்மலையில், 2000 ஏக்கரில் மிளகு பயிரிட்ட விவசாயிகள் சந்தைப்படுத்த முடியாமல், மிளகினை பறிக்காமல் கொடியிலேயே விடும் அவலம் தொடர்கிறது. இதனால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலைக்கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெருங்காடு, பள்ளத்துக்கால்வாய், பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில், மிளகு சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகு, பிற மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் உள்ள மார்க்கெட்டிற்கும் லாரிகள், பேருந்துகள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு மிளகு சாகுபடி விளைச்சல் நன்றாக இருந்ததால், தாங்கள் வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த மலைக்கிராம விவசாயிகளுக்கு, கொரோனா எதிரொலியாக அறிவித்த ஊரடங்கால் ஏமாற்றமே மிஞ்சியது. ஊரடங்கு உத்தரவினால் கூலிக்கு ஆள் கிடைக்காத நிலை, சந்தைப்படுத்த கொண்டு செல்ல வாகனங்கள கிடைக்காத நிலை, வாகனங்கள் கிடைத்தாலும் அதிக கட்டணம் போன்ற காரணங்களால், மரக்கொடிகளிலேயே மிளகினை விட்டு விடும் நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளதாக கொடைக்கானல் பகுதி மிளகு விவசாயிகள வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு மிளகு கிலோ ஒன்றிற்கு 900 ரூபாய் வரை விலை போனதாகவும், ஊரடங்கினால் மிளகு விற்பனை தற்போது சரிந்து, கிலோ ஒன்றிற்கு 250 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு தங்கள் நிலை அறிந்து உதவ முன்வர வேண்டும் எனவும், காய்கறி விவசாயிகளுக்கு விலக்கு அளித்தது போல, மிளகு சாகுபடி நேரங்களில், கூலிக்கு ஆட்கள் பணியாற்ற அனுமதி வழங்குமாறும், நேரடியாக அரசே மிளகை கொள்முதல் செய்து, தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும், எனவும் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
credit ns7.tv