வெள்ளி, 19 ஜூன், 2020

இந்தியா, சீனா உரசல் - நம்பிக்கையுடன் முடிந்த பேச்சுவார்த்தை

லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் கடந்த மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாட்டு எல்லை நெடுகிலும் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன் பதற்றமும் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 6ம் தேதி ஒருமித்த முடிவை எடுத்தன. அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கி வந்தன.


இந்த பதற்றத்தணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 15ம் தேதி இரவில் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா தரப்பிலும் 35 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இருநாடுகளுக்கு இடையே உச்சபட்ச பதற்றம் நிலவுகிறது. ஆனால் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி மோதல் நடந்த மறுநாளான 16-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவ மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது


இதில் அன்று முடிவு எட்டப்படாததால், 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. இரு தரப்புக்கும் இடையே கடந்த 6-ம் தேதி எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இரு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (ஜூன்.19) நடைபெறுகிறது.

இதற்கிடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சந்திப்பு மிகவும் பலனளித்தது. கடந்த மூன்று நாட்களாக நிலவிய முட்டுக்கட்டை உடைக்கப்பட்டது. இரு தரப்பினரும், சில விஷயங்களை ஒப்புக் கொண்டன. வரவிருக்கும் கூட்டங்களில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் லடாக் எல்லையில் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறுவது குறித்தோ, அதிகரிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய நிறுவனமான (ஏஎஸ்பிஐ) சமீபத்திய செயற்கைக்கோள் படங்களில், சீன – இந்தியா எல்லையின் லடாக் பகுதியின் அனைத்து ஹாட்ஸ்பாட்களிலும், இரு தரப்பினரும் தங்கள் படைகளை முன்னோக்கிய நிலைகளில் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 1996 மற்றும் 2005 போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை ஆனால் இந்திய வீர்கள் கையில் துப்பாக்கி இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லடாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என ராணுவம் நேரடியாக விளக்கம் அளித்துள்ளது.

மேஜர் மற்றும் ஒரு கேப்டன் உட்பட 10 இந்திய வீரர்கள் திங்கள்கிழமை இரவு முதல் சீனக் காவலில் இருந்ததாக வெளியான தகவல்களுக்குப் பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.