வெள்ளி, 19 ஜூன், 2020

தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 49 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. அதோடு ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 49 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கபட்ட உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,141பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை 2000ஐ தாண்டி பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 81 கோவிட்-19 பரிசோதனை மையங்களில் அதிகபட்சமாக 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8 லட்சத்து 443 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இன்று 49 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 123 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 பேருக்கும், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 28 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,017 பேர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,065ஆக உள்ளது.