சனி, 5 டிசம்பர், 2020

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வென்றது யார்?

 Hyderabad election results tamil news : தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டி.ஆர்.எஸ் டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன.இதில் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின.அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரடியாக வந்து வாக்கு சேகரித்தனர். அதேசமயம் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஹைதராபாத் மக்களவை தொகுதியை தன்வசம் வைத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியும் வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

வாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கியது. 30 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. இந்தநிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பிறகு வழக்கமான வாக்குச்சீட்டுகள் மூலம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 55 இடங்களில் வெற்றி பாஜக – 48 இடங்களில் வெற்றி அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) – 44 இடங்களில் வெற்றி காங்கிரஸ் – 2 இடங்களில் வெற்றி என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 150 வார்டுகளில் 76 இடங்களை கைப்பற்றினார் பெரும்பான்மையுடன் செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – எஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.