நடிகர் ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இணைந்துள்ள அர்ஜுனமூர்த்தி மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அவருடைய மகனும் திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31-ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்றும் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் ஹேஷ் டேக்குடன் அறிவித்தார். வரபோகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, வெளிப்படையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் அவசியம் என்று கூறினார். பின்னர், அவர் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்து ஊடகங்கள் முன்பு அறிமுகப்படுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் அர்ஜுனமூர்த்தியை அறிமுகப்படுத்தும்போது, இவர் எனக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்று குறிப்பிட்டார். ரஜினிகாந்தே ஒருவரைப் பற்றி தனக்கு கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டதால் அர்ஜுனமூர்த்தி ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் தமிழக அரசியலிலும் கவனத்தைப் பெற்றார்.
இதையடுத்து, ஊடகங்கள் அர்ஜுனமூர்த்தியைப் பற்றிய விவரங்களையும் அவருடைய பின்னணியைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டன. அர்ஜுனமூர்த்தி என்.எஃப்.சி டெக்னாலாஜி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அவர் ஒரு தொழில் முனைவோர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக அர்ஜுனமூர்த்தி பாஜகவில் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் வேல் யாத்திரையில் பங்கேற்று அதனை ஒருங்கிணைத்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும் செய்திகள் வெளியானது.
ரஜினி கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இணைந்திருக்கும் அர்ஜுனமூர்த்தி, பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகி என்பதோடு, திமுகவில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் ஆலோசகர் என்பதும் சமூக ஊடகங்களில் விவாதமானது.
இந்த நிலையில், முரசொலி மாறனின் மகனும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், அர்ஜுனமூர்த்தி தனது தந்தை முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த்தால் தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி எனது தந்தை முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.