ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி; 180 மாணவர்கள் வேறு பள்ளியில் படிக்க விண்ணப்பம்

 

6 8 2022 Kalluruchi schools students apply for certificates: கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த 2,000 மாணவ, மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க முடிவு செய்து விண்ணப்பித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஒருவர் மர்மமான முறையில் கடந்த மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்திற்கு நீதிக்கேட்டு அவரது பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இன்னொரு புறம் மாணவி மரணம் காரணமாக பள்ளியில் கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பள்ளிக் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன.

இதனால் பள்ளியில் படித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது. மாணவி உயிரிழந்த 13 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே, இந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை வேறொரு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது வரை 2,000 மாணவ மாணவிகள் தங்களுடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக, 180 மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பள்ளிகளில் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/kalluruchi-schools-students-apply-for-certificates-490428/