சனி, 6 ஆகஸ்ட், 2022

சிறுபான்மையினர் அதிருப்தி: பினராயி விஜயன் அரசு 2 வாரத்தில் 3 முறை பின்வாங்கியது ஏன்?

 

வக்ஃப் வாரிய நியமனங்கள் குறித்த பினராயி விஜயனின் முடிவு, முஸ்லிம் சமூகம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் எப்போதும் ஒன்றாகப் பயணிக்கும் சமஸ்தாவுக்கும் ஐ.யு,எம்.எல்-க்கும் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை உணர்ந்து, கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசாங்கம் கடந்த இரண்டு வாரங்களில் இருபாலருக்கும் பொதுவான சீருடைகள், மாவட்ட மேஜிஸ்ட்ரேட் நியமனம் மற்றும் வக்ஃப் வாரிய பொறுப்புகள் நியமனம் ஆகிய மூன்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது முடிவுகளை மாற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யு.டி.எஃப்) பாரம்பரியமாக ஆதரவளிக்கும் சிறுபான்மை சமூகத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்காத இடதுசாரிகளின் இந்த முயற்சியின் விளைவுதான் இந்த ஏற்ற இறக்கங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் இருபாலருக்கும் பொதுவான சீருடைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி புதன்கிழமை அறிவித்தார். மாணவர்களிடையே பாலின விழிப்புணர்வையும் பாலின சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று அறிவித்த 48 மணிநேரத்தில் அமைச்சர் தனது மனதை மாற்றிக்கொண்டுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ டாக்டர் எம்.கே.முனீர் பாலின வேறுபாடு இல்லாத பொதுவான சீருடை மற்றும் பாலின சமத்துவம் என்ற போர்வையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத எதிர்ப்பை ஊக்குவிப்பதாக கூறியதற்கு, இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முற்போக்கான நிலைப்பாடு என்று அமைச்சர் பதில் கூறினார். சிவன்குட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரின் சிந்தனை காலாவதியானது என்று முத்திரை குத்தியதோடு அந்த சிந்தனை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறினார்.

பினராயி விஜயன் அரசு பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக இரு பாலினத்தவருக்கும் பொதுவான சீருடைகளை அறிமுகப்படுத்தியது, பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருவரும் ஒரே பெஞ்சில் அமர அனுமதித்தது. இருபாலருக்கும் பொதுவான சீருடைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தன் மூலம், சமூகப் பிரச்சினைகளில் முற்போக்கான நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட முனீர், அத்தகைய மாற்றங்களுக்கு சமூகத்தில் வளர்ந்து வரும் வெறுப்பை பிரதிபலித்துள்ளார்.

ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பதவிக்கு ஸ்ரீராம் வெங்கிடாராமன் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகரித்து எல்.டி.எஃப் அரசாங்கத்தை திங்கள்கிழமை அவரைப் பணிநீக்கம் செய்ய கட்டாயப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் வெங்கிடாராமன் குற்றம் சாட்டப்பட்டவர். அதில் பஷீர் கே.எம்.பஷீர் 2019 இல் கொல்லப்பட்டார். பஷீர், காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தலைமையிலான சன்னி முஸ்லிம் சமூகத்தின் செய்தித்தாளான “சிராஜ்” நாளிதழில் நிருபராக இருந்தார்.

வெங்கிடாராமன் பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடந்த சனிக்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற காந்தபுரம் தலைமையிலான கேரள முஸ்லிம் ஜமாத் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டங்களை நடத்தியதுடன். இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியது. பாரம்பரியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிற்கும் ஒரு பிரிவினரை கட்சி காயப்படுத்தக் கூடாது என்று கூறினார்கள். எதிர்த்து போராட்டங்கள் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அரசாங்கம் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நீக்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான ‘தேசாபிமானி’யில் வியாழக்கிழமை எழுதிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், வெங்கிடராமனை நீக்கும் முடிவை நியாயப்படுத்தினார். அவர் எழுதியுள்ள பதிவில், “பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து வெங்கிடராமன் நீக்கப்பட்டார். இத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை எல்.டி.எப். அரசாங்கம் பரிசீலனை செய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “மாவட்ட ஆட்சியரை நீக்கிய கேரள அரசின் முடிவு தவறான மற்றும் ஆபத்தான செய்தியை அளித்துள்ளது. மேலும், தலைமையில் இருப்பவர்களின் கோழைத்தனத்தை இது காட்டுகிறது. ஒரு முடிவைச் செயல்படுத்த அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. கலெக்டரை அழுத்தம் கொடுத்து நீக்கியது தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறது” என்று கூறினார்.

ஜூலை 20 அன்று, முஸ்லீம் அமைப்புகள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகியவற்றின் அழுத்தங்களுக்குப் பிறகு, வக்ஃப் வாரிய நியமனங்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கும் முடிவை பினராயி விஜயன் தலைமையிலான நிர்வாகம் மாற்றியது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சமஸ்தா கேரளா ஜெம்-இய்யதுல் உலமாவின் நம்பிக்கையை வென்ற பிறகுதான் பினராயி விஜயன் இந்த பிரச்சினையில் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இதன் மூலம், முஸ்லிம் சமூகம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் எப்போதும் ஒன்றாகப் பயணிக்கும் சமஸ்தாவுக்கும் ஐ.யூ.எம்.எல்-க்கும் இடையே பினராயி விஜயன் பிளவை ஏற்படுத்தினார்.


source https://tamil.indianexpress.com/india/kerala-cm-pinarayi-vijayan-gender-neutral-uniform-waqf-board-minority-anger-489778/