திங்கள், 15 ஆகஸ்ட், 2022

போலந்து-ஜெர்மனி நதியில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு..2 லட்சம் டாலர் வெகுமதி அறிவிப்பு.. நடந்தது என்ன?

 

மத்திய ஐரோப்பாவில் போலந்து-ஜெர்மனி நாடுகளை கடந்து ஓடர் நதி ( Oder River)செல்கிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் 10 டன் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கின. இது இருநாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் வழியாக செல்லும் ஓடர் நதி நீரின் மாதிரிகளை போலந்து ஆய்வு செய்தது. ஆய்வில் நீரில் அதிக அளவு உப்புத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் பாதரசம் கலக்கப்பட வில்லை என போலந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அன்னா மோஸ்க்வா சனிக்கிழமை தெரிவித்தார். முன்னதாக ஜெர்மனி ஊடகங்களில் நதி நீரில் பாதரசம் கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. போலந்தில் நதி நீர் குறித்து விரிவான ஆய்வுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெர்மனியில் இருந்து எடுக்கப்பட்ட நதி நீரின் சோதனையில் இதுவரை பாதரசம் இருப்பதாக காட்டவில்லை என்று மோஸ்க்வா கூறினார். ஓடர் நதி செக் குடியரசில் இருந்து செல்கிறது. இது செக்கியா என்றும் அழைக்கப்படுகிறது. பால்டிக் கடலில் கலப்பதற்கு முன் போலந்து, ஜெர்மனி வழியாக நதி ஓடுகிறது.

போலந்து பிரதமர் மடெஉச்ஸ் மொராவியேக்கி (Mateusz Morawiecki) கூறுகையில், அதிக அளவிலான இரசாயன கழிவுகள் வேண்டுமென்றே நதியில் கலக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் இரண்டாவது நீளமான நதியில் கொட்டப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக மோசமாகும். நதியை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்றார். தொடர்ந்து, நதியை மாசுபடுத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 1 மில்லியன் ஸ்லோட்டிகள் ($200,000) வெகுமதியாக வழங்கப்படும் என்று போலந்தின் உள்துறை அமைச்சர் கூறினார்.

வடகிழக்கு ஜெர்மனிய மாநிலமான மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில் உள்ள அதிகாரிகள் Szczecin குளத்திலிருந்து மீன்பிடிக்கவோ அல்லது தண்ணீரைப் பயன்படுத்தவோ வேண்டாம் என மக்களை எச்சரித்துள்ளனர். ஓடர் நிதி நீர் இந்த குளத்தில் கலக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

போலந்தின் தேசிய நீர் மேலாண்மை ஆணைய தலைவர், 10 டன் இறந்த மீன்கள் ஆற்றில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவித்தார். ஜெர்மனி நிதி நீர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் உயரிழந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருநாடுகளும் நதியின் மாதிரிளை வைத்து மாசு அடைந்ததற்கான காரணத்தை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/science/high-salinity-found-in-european-river-after-fish-die-off-494191/

Related Posts: