ராகுல் காந்தி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படங்களை சேதப்படுத்திய வழக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி., ராகுல் காந்தியின் அலுவலகம் ஜூன் 24ஆம் தேதி சூறையாடப்பட்டது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில் சுவரில் மாட்டப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் படமும் கீழிறக்கி சேதப்படுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்hட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த முதலமைச்சர் பினராய் விஜயன், “ சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. முதலில் போலீசாரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் மகாத்மா காந்தி படம் சுவரில் மாட்டப்பட்டிருந்ததும், அது கீழே விழவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஆகவே இந்தக் குற்றத்தில் காங்கிரஸ் கட்சியினரே ஈடுபட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி அலுவலகத்தில் மகாத்மா காந்தி உருவப்படத்தை சேதப்படுத்தியதாக காங்கிரஸ் தொண்டர்கள் இன்று (ஆகஸ்ட் 17) 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், நஹ்ஷத், கே.ஏ. முஜிப், எஸ்.ஆர். ராகுல் மற்றும் கே.ஆர். ரதீஷ் குமார் ஆகியோர் ஆவார்கள். இதில் ரதீஷ் குமார் ராகுல் அலுவலகத்தின் உதவியாளர் ஆவார்.
இந்த நிலையில் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தி அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து நீக்கியது நினைவு கூரத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/kerala-rahul-is-office-assistant-among-four-congress-workers-held-for-damaging-gandhi-portrait-496814/