சனி, 20 ஆகஸ்ட், 2022

பீகார் தாக்கம் தேசிய அரசியலில் எதிரொலிக்கும்: அகிலேஷ் யாதவ்

 

பீகாரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் தாக்கத்தால் , வரும் 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று உருவாகும் என அகிலேஷ் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவரும்,உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் சிங் யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி,லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் மீண்டும் கைகோர்த்து பீகாரில் ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு நேர்மறையான அறிகுறி” என்று கூறினார். எப்போதும் பீகார் அரசியலின் தாக்கம் தேசிய அரசியலில் எதிரொலிக்கும் எனவும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று உருவாகும், அதற்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “உத்தர பிரதேசத்தில் அனைத்து துறைகளிலும், ஊழல் தலைவிரித்தாடுகிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது பாஜகவின் கூட்டணி கட்சிகள் எதுவும் மன நிறைவுடன் இல்லை. பாஜக கூட்டணி கட்சிகள் ஜக்கிய ஜனதாவை பின்பற்றி கூட்டணியை விட்டு விரைவில் விலகுவார்கள் என்றும் அவர் கூறினார்.சமாஜ்வாதி கட்சி தற்போது அமைப்பு ரீதியாக வலுப்படுத்தி, மறுகட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த உள்ளதாகவும் கூறினார். தற்போது இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படுவதில்லை” என அவர் குற்றஞ்சாட்டினார்.



source https://news7tamil.live/bihar-impact-reverberates-in-national-politics.html