
சென்னை அடையாறு முகத்துவாரத்தில் மீன்கள் கரையோரம் செத்து மிதக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அடையார் முகத்துவாரத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள் கழிவு நீர் அதிகமாகி ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
கடலை மக்கள் குப்பை தொட்டியாக ஆக்கியதன் விளைவுகளை மீன்கள் செத்து மிதப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. மாநகர கழிவுகள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், ரசாயன தொழிற்ச்சாலை, இரசாயண பொருட்களை பயன்படுத்தி செய்த சிலைகள், என எல்லா கழிவுகளையும் கடலில் கொண்டுபோய் கொட்டியதால், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கின்றன எனக் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதைப்போல திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் கடல் பகுதியில் உயிரிழந்த 4 டால்பின்கள் குறித்து மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரஞ்சித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரை பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு கரை ஒதுங்கிய 30-க்கும் மேற்பட்ட டால்பின்களை அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் விட்டனர். அதில் 4 டால்பின்கள் மட்டும் உயிரிழந்தன. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட வனத்துறை அலுவலர் சம்பத், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரஞ்சித் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். டால்பின்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். எனினும், டால்பின்கள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கால்நடைத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பின்பே முழுமையான தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.