செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதையடுத்து, செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துமனையில் பணிபுரியும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உடனே போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த போராட்டம் தேவையற்றது என கண்டித்த நீதிபதிகள், செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு விட்டு நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இல்லாவிட்டால் செவிலியர் தரப்பு வாதங்களை கேட்கமாட்டோம் என்றும் கண்டிப்புடன் கூறினர். அதுமட்டுமின்றி செவிலியர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே நீதிமன்ற உத்தரவை ஏற்று நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை கைவிடுவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து சென்னையில் போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் நாளை முதல் தங்கள் பணிக்கு திரும்பவுள்ளனர்.