இரட்டை இலையை மீட்டு வந்தாலும் அந்த சின்னத்திற்கு உரிய வாக்கு வங்கி ஜெயலலிதா மறைவிற்கு பின் அப்படியே தொடருமா என்கிற கேள்வி எழுகிறது. எனவே இரட்டை இலைக்கான வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
அதிமுக ஆட்சி காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் கடைசியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி என்கிற அடையாளத்தோடு உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் விரைவில் வரப்போகும் இடைத் தேர்தலில் வெற்றியை ஈட்டியே ஆக வேண்டும் என்கிற கவுரவ பிரச்னை இபிஎஸ்-ஓபிஎஸ் வசம் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயங்குவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அந்த தேர்தலை சர்ச்சைகளுக்கு இடமின்றி நடத்தி வெற்றி கனியை பறிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றிகளை ஈட்டி நாட்டின் 3வது பெரிய கட்சியாக மக்களையில் அதிமுகவை உயர்த்தியவர் ஜெயலலிதா. அதே நேரத்தில், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்கிற சவாலும் காத்திருக்கிறது.
அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகள் ஏற்படுத்தப்பட்டாலும் வலிமையான ஒற்றை தலைமையையே அதிமுகவின் அடையாளமாக மக்கள் பார்த்து வந்துள்ளதால் இரட்டை தலைமை என்கிற ஏற்பாடு மக்களிடம் எடுபடுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்கிற வசீகர தலைமையே தேர்தல் களத்தில் அதிமுகவின் பலமாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. எனவே அடுத்து வரும் தேர்தல் களங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பேரில் யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு இருவரில் ஒருவர் முன்னிறுத்தப்படும்போது மீண்டும் உட்கட்சி பூசல் எழுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இரட்டை இலையை மீட்க முடியவில்லை என்கிற தோல்வியால் தமது அரசியல் நடவடிக்கைகளை டிடிவி தினகரன் முடித்து கொள்ளமாட்டார் என்பது அவரது அளித்த பேட்டிகள் மூலம் தெரிகிறது. இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு செய்யும் மேல்முறையீடு உள்ளிட்ட சவால்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.