புதன், 29 நவம்பர், 2017

​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்! November 29, 2017

Image

கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் தொடர்ந்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவது வடகொரியா. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கொரிய தீபகற்பத்தில் போர் மூளலாம் என்ற நிலை உள்ளது. உலக நாடுகள் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்தாலும் அவற்றிற்கு கொஞ்சம் கூட செவிமடுக்க வட கொரியா தயாராக இல்லை. இதன் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகள் ஜப்பானுக்கு சொந்தமான பகுதியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 

வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வடகொரியாவின் செயல்பாடுகளை கையாள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் வட கொரியா மீது தடைகளை விதிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார். 

வடகொரியாவின் செயலால் பெரிதும் பாதிக்கப்படும் நாடுகளில் முக்கியமானது தென் கொரியா. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கண்டித்துள்ள தென் கொரிய அதிபர்  MOON JAE ஆத்திரமூட்டும் இது போன்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் குறிப்பிட்டார். 

அமெரிக்க வல்லாதிக்கம், அதன் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு இவ்வளவையும் தாண்டி தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் வடகொரியாவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.