முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக என்கிற பெயரை அந்த அணியினரே பயன்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலையடுத்து இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி முடக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்ட அணியினரும், அவரை எதிர்த்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும் இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் புதிய திருப்பமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைமச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்தனர். இதையடுத்து இரட்டை இலை வழக்கில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் ஒரு தரப்பினராகவும் சசிகலா, டிடிவி தினகரன் அணியினர் மற்றொரு தரப்பினராகவும் மாறினர். இரு தரப்பிலும் புதியதாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த அக்டோபர் 6ந் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு கட்டங்களாக விசாரணை நீடித்தது.
இந்நிலையில் இன்று இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் தீர்ப்பை வழங்கியது. இதில், இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அஇஅதிமுக என்கிற பெயரை அந்த அணியினருக்கே சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.