
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதிவேக காற்றின் காரணமாக, 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே , இடலாக்குடி அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பலத்த காற்றின் காரணமாக பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அருகில் உள்ள காவல்துறையினரின் போக்குவரத்து சமிக்கை விளக்கு கம்பம் கீழே விழுந்ததால், கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களே சமிக்கை விளக்கு கம்பத்தை அப்புறப்படுத்தினர். திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரில் குடிசை வீட்டின் முன்பாக மரம் விழுந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த 4 பேர் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.