வியாழன், 30 நவம்பர், 2017

நிறையும் தென் தமிழக அணைகள்! November 30, 2017

Image

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருவதால், பெரியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமானது 34 அடியாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அணையின் நீர் மட்டம் உயர்ந்தால், நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.