நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் போது, பத்திரிகையாளர் கார்டூனிஸ்ட் பாலா இந்த
தற்கொலையைக் கண்டிக்கும் வகையிலும், முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்ட காவல் ஆணையர் ஆகியோரின் உருவத்தைச் சித்தரித்தும் கார்டூன் வரைந்தார். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த 7.11.2017 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பாலா வரைந்த கார்ட்டூனும் காட்சி படுத்தப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் பாலாவிற்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் பேராட்டம் நடத்தினர். இதன் பின்னர், பாலா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், குறிப்பிட்ட அந்த கார்ட்டூனை வரைந்ததற்காகவும், பாலாவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காகவும், பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டதைக் கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், கார்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.