திங்கள், 27 நவம்பர், 2017

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் பருவமழை November 27, 2017

Image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. 

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வடபழனி, கிண்டி, மற்றும் புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், போரூர், தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை நீர், வெள்ளம் போல் தேங்கியது.

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மிதமான மழை பெய்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால், சாலை ஓரங்களில் மழை நீர்தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாம்பட்டி , மேலவளவு , தெற்குதெரு, அழகர்கோவில், நரசிங்கம்பட்டி, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை சுமார் 1 மணி நேரமாக திடீரென மழை பெய்தது. தற்போது மேலூர் பகுதி பாசனத்திற்கு, முல்லை பெரியாறு அணை தண்ணீரை போராடி பெற்றிருக்கும் சூழலில், இந்த மழை மேலூர் பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோல், காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் பரவலாக  கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த கன மழையால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். 

இதனிடையே, தென் தமிழகத்தில் இன்றும் நாளையும், அநேக இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா, தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.