இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதலின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி விமான நிலையம், தாஜ் பேலஸ், ஒபேராய் ஹோட்டல், நரிமன் இல்லம் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
நவம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 164 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 308 பேர் காயமடைந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின்போது கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் அதற்கு தடையாக இருந்த குஜராத்தை சேர்ந்த 3 மீனவர்களை சுட்டுக்கொன்றனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை உதவி கிடைக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.