வியாழன், 23 நவம்பர், 2017

அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா November 23, 2017

Image

அணு ஆயுத என்னும் போர்வாளை கைவிடப் போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. போர் தொடுத்தால், அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்போம் எனவும் வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ’வடகொரியாவின் தலை மீது அமெரிக்க அரசு தீவிரவாத தொப்பியை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் குறை கூறியுள்ளது. 

அமெரிக்காவின் நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அணு ஆயுத போர்வாளை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   

இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில், க்யூபாவின் ஆதரவைப் பெறும் வகையில் வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் க்யூபா சென்றுள்ளார். 

உலக நாடுகளின் நெருக்கடியைக் கடந்து அணு ஆயுதங்கள் தயாரிக்கப்போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதையடுத்து அந்நாட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. 

இதனால் வடகொரியாவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், க்யூபா சென்றுள்ள வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, அந்நாட்டு அமைச்சர் ப்ரூனோ ரோட்ரிக்வெஸ் உடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அணு ஆயுதங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள க்யூபா, கடந்த 1960ம் ஆண்டிலிருந்து வடகொரியாவுடன் இணக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், க்யூபாவுடன் உறவுகள் மேம்பட்டால், வடகொரியா தனிமைப்படுத்தப்பட்ட நாடு என்ற பெயரில் இருந்து விடுபடமுடியும் எனக் கருதப்படுகிறது.