ஞாயிறு, 26 நவம்பர், 2017

பிங்க்’ நிறத்தின் அர்த்தம் என்ன?

Image
‘பிங்க்’ நிறத்தின் அர்த்தம் என்ன?

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தத்தினை சமூகம் நமக்குத் தருகிறது. வெள்ளை, பச்சை, காவி, கருப்பு, சிவப்பு என ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தமும், பல தொடர்புகளும் இருப்பதைப் போன்று, பிங்க் நிறத்திற்கும் ஒரு அர்த்தமும் தொடர்பும் உள்ளது. எதனோடு என்றால், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வோடு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தோடு. 

மார்பகப் புற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் வளர்கின்ற ஒருவிதமான கட்டி. அவை அக்குளில் இருக்கும் நிணநீர் கட்டிகளுக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடிய தன்மை உடையதாகும். மார்பக சுய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என்பதால் தான் இது குறித்தான விழிப்புணர்வுப் பிரசாரம் பெரும் அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது இந்தியாவில் இளம் வயதிலேயே மார்பக பிரச்னைகள் ஏற்படுவதாலும், எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதாலும் அனைத்து வயது பெண்களும் சுய பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும்.

மார்பக சுய பரிசோதனையை செய்வது எப்படி ?

மேலாடையை நீக்கிவிட்டு நிலைக்கண்ணாடி முன்பு கைகளை பக்கவாட்டில் தொங்கவிட்டபடி நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்து கொள்ளவும். மார்பகங்களில் ஏதேனும் தடிப்பு, கட்டி அல்லது இருபக்க மார்பகங்களின் அளவுகளின் மாற்றம், மார்பக காம்புகள் உள் அடங்கி போய்விடுதல், நிறமாற்றம், மார்பக காம்புகளின் ரத்தக்கசிவு உள்ளதா என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

அடுத்து, நிலைக்கண்ணாடி முன்பு கைகளை மேலே தூக்கியபடி நிற்கவும். மேற்கூறியபடி உன்னிப்பாக கவனிக்கவும். மார்பகத்தின் அடிப்புறத்தை பரிசோதனை செய்யவும். குறிப்பாக பருத்த மார்பகங்களாக இருந்தால் ஒரு புறம் திரும்பி நின்று இந்த பரிசோதனையை மேற்கொள்ளவும். 

இதையடுத்து, மல்லாந்து படுத்தபடி முதுகில் ஒரு தலையணையை வைத்து கைகளை தலையின் பின்புறம் வைத்து படுத்து கொள்ளவும். கைகளால் மெதுவாக மார்பகங்களை தடவி பரிசோதனை செய்யவும். சக்கர முறையில் வட்டமாக மார்புகளை உள்ளங்கையால் தேய்த்தபடி அக்குள் வரை மெதுவாக பரிசோதனை செய்யவும். 

மார்பு காம்புகளை நீவி அல்லது இழுத்து திரவம் ஏதேனும் வெளிப்படுகிறதா என்று பரிசோதனை செய்யவும். இந்த பரிசோதனைகளை மாதம்தோறும் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்திற்கு பிறகு செய்வது நல்லது. இந்த சமயங்களில் மார்பகம் மிருதுவாக இருப்பதால் கட்டிகள் இருப்பின் அவற்றை சுலபமாக உணரலாம். மாதவிடாய் நின்ற பெண்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள், கருப்பை நீக்கப்பெற்ற பெண்கள் ஆகியோர் மார்பக சுய பரிசோதனைக்கு வசதியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, மாதத்தின் முதல் நாளில் இதை மேற்கொள்ளலாம்.

பரிசோதனையின் போது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பதை உணர்ந்தாலோ, உங்கள் இரத்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மார்பக புற்றுநோய் இருந்தாலோ ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களை அணுகி, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். மருத்துவரால் மார்பக பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் முழுமையாக குணமாக்கலாம்.