
உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்பீர்களா அல்லது தேசிய, மாநில கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்தால் ஆதரிப்பீர்களா என கருத்து கணிப்பில் தமிழக புதுச்சேரி மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமானதும், தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வில் இருப்பதும் தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து மக்கள் வேறொரு மாற்றுக்கு நடிகர்கள் மூலம் தயாராக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலானோர் நடிகர்கள் தனிகட்சி தொடங்குவதை விட யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதை பொருத்தே தங்களது ஆதரவை முடிவு செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர். சுமார் 47 சதவீதம் பேர் நடிகர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தினால் மட்டுமே ஆதரவு என கூறியுள்ளனர். மக்களின் இந்த பதில் மக்கள் யாருமே இந்த நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் முழுவதுமாக ஆதரவளிக்க போவதில்லை என்பதை பிரதிபலிக்கிறது.
18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இந்த மூன்று நடிகர்களில் எவரேனும் அரசியலுக்கு வந்தால் அவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள் எனபதை பொருத்தே ஆதரவளிப்போம் என 45 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களில் 47 சதவீதம் பேரும், 50 வயதுக்கு மேலானாவர்களில் 51 சதவீதம் பேரும் ரஜினி, கமல், விஜய் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதை பொருத்தே ஆதரவு தருவோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த மூன்று நடிகர்கள், தனி கட்சி தொடங்கினால் ஆதரவு என சுமார் 39 சதவீத பேரும், கூட்டணி வைப்பது பொருத்து என 48 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் பெண்களில் 40 சதவீத பேர் நடிகர்கள் தனி கட்சி தொடங்கினால் ஆதரவு என்றும், 45 சதவீத பேர் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பொருத்தே ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை பொருத்துதான் ஆதரவளிப்போம் என அதிக பட்சமாக கிறித்துவர்களில் சுமார் 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்து இதே போன்ற கருத்தை 49 சதவீத இஸ்லாமியர்களும் 46 சதவீத இந்துக்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.