திருவட்டார் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது, போலீஸார் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியான அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போல் மேலும் ஒரு சம்பவம் நடந்திருப்பது அப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் என்பவரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர் நிற்காமல் சென்றதால், காவல் உதவி ஆய்வாளர் தேவராஜன் லத்தியால் தாக்கினார். இதில் நிலைதடுமாறி விழுந்த ராஜேஷ்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமிரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவட்டார் காவல் நிலைய போலீசார் புத்தன்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆற்றூரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரை நிறுத்த முற்பட்டனர். அவர் தனது வாகனத்தை சற்று தூரமாக நிறுத்தியதால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுவாமிநாதன், தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.