ஞாயிறு, 26 நவம்பர், 2017

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பெண்களை சீண்டிய தமிழக இளைஞர்கள்..! November 25, 2017

Image

சென்னை நேரு மைதானத்தில் கால்பந்து போட்டியை காண வந்த வடகிழக்கு மாநில பெண்களை தமிழக இளைஞர்கள் சிலர் தகாத முறையில் சீண்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் சென்னை  அணிக்கும் (Chennayin FC) வடகிழக்கு மாநிலங்களின் யுனைடைட் அணிக்கும் ( NorthEast United FC ) இடையே இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் வந்திருந்தனர். கால்பந்து போட்டி நடக்கும் போது, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்பு சூழ்ந்துகொண்ட சில தமிழக இளைஞர்கள் அவர்களை கேலி, கிண்டல்களும் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கேலி- கிண்டல்கள் செய்த இளைஞர்களில் சிலர் சென்னையில் கால்பந்து அணியின் உடையான நீல நிற ஆடையை அணிந்திருப்பதன் மூலம் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அந்த இளைஞர்கள் , வடகிழக்கு மாநில பெண்களை தகாத முறையில் சீண்டி விளையாடும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. இளைஞர்களை அப்பெண்களும், உடன் இருந்த நண்பர்களும் தடுக்க முற்பட்டும் அதை மீறி, ஆயிரக்கணக்கானோர்  கூடியிருக்கும் ஒரு மைதானத்தில் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வடகிழக்கு மாநிலங்களின் யூனைடைட் அணியின் உரிமையாளர் ஜான் ஆப்ரஹாம். “ இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல். நிச்சயம் நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணை நிற்போம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம்.” என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த மைதானத்தில் இருந்த வடகிழக்கு மாநில இளைஞர் ஒருவர், “தமிழக இளைஞர்கள் சிலர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கேலி - கிண்டல் செய்தனர். இது இன ரீதியாக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது  ” என கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பலரும், “ உங்களை நம்பி வந்தால் இப்படித்தான் நடந்துகொள்வீர்களா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.