வியாழன், 30 நவம்பர், 2017

கனமழையால் முடங்கிய கன்னியாகுமரி மாவட்டம்! November 30, 2017

Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக, 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே, இடலாக்குடி  அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. 

ஓகி புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.