
சுனாமி பீதியால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஒரு சில கடலோர மாவட்டங்களை மீண்டும் சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகையும், ஐயப்ப பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு, திருவேணி சங்கமத்தில் நீராடிச் செல்வது வழக்கம். என்றபோதிலும், சுனாமி பீதி காரணமாக சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 4 ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஏதேனும் ஒரு இயற்கை பேரழிவு நடைபெறும் என்ற வதந்தி பரவிவருவது குறிப்பிடத்தக்கது.