மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியால் இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சி எதிராக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
இதனால், சிறுபான்மையின மக்கள் தங்களின் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவசர நிலையைப் போன்ற சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் மம்தா பேனர்ஜி விமர்சித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்தை வெளியிட மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,` பத்மாவதி திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது துரதிருஷ்டவசமானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை அழிக்கும் வகையில் கட்சி ஒன்று திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இதை சினிமா துறையினர் ஒருங்கிணைந்து எதிர்த்து போராட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணரும் பத்மாவதி படக்குழுவினர், பாதுகாப்பாக இருக்க, மேற்கு வங்கத்திற்கு வரலாம் என்றும் மம்தா பேனர்ஜி வலியுறுத்தியுள்ளார்.