சனி, 25 நவம்பர், 2017

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியால் இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சி எதிராக செயல்படுவதாகவும் விமர்சித்தார். இதனால், சிறுபான்மையின மக்கள் தங்களின் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவசர நிலையைப் போன்ற சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் மம்தா பேனர்ஜி விமர்சித்துள்ளார். இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்தை வெளியிட மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,` பத்மாவதி திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது துரதிருஷ்டவசமானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை அழிக்கும் வகையில் கட்சி ஒன்று திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இதை சினிமா துறையினர் ஒருங்கிணைந்து எதிர்த்து போராட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணரும் பத்மாவதி படக்குழுவினர், பாதுகாப்பாக இருக்க, மேற்கு வங்கத்திற்கு வரலாம் என்றும் மம்தா பேனர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள தகவலில், ஆர்.கே.நகரில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிக்குட்பட்ட வீதிகளில் தற்காலிக பூத் அமைக்கவும், அரசியல் கட்சியினர் சாலையோரத்தில் தேவையின்றி அமரவும் தடை விதிப்பதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். 

இரவு நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறி உள்ளார். 

தேர்தல் பரப்புரை வாகனங்களை முன் அனுமதியுடன் இயக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள ராஜேஷ் லக்கானி, வெளியூர் வாகனங்கள் தொகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டாலோ, காரணம் இல்லாமல் நுழைந்தாலோ பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
Image