புதன், 29 நவம்பர், 2017

இருதரப்பு மோதலால் பலியான இளைஞரின் உயிர்..! November 29, 2017

Image

கடலூர் மாவட்டத்தில் இரு தரப்பு மோதலால் தீகுளித்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் அதே ஊரில் இருக்கும் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சிலம்பரசன் கடந்த தீபாவளி  தினத்தன்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்த், மது போதையில் தகராறு செய்ததுடன் சிலம்பரசனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டடுள்ளது. இந்த தகராறின்போது, சிலம்பரசன் ஆனந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனால், மனம் உடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் தீக்காயத்துடன் கிடந்த ஆனந்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஆனந்தின் உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆனந்த் மீது சிலர் தீ வைத்து விட்டதாகவும், அவர்களை கைது செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். 

இதனையடுத்து, ஆனந்துடன் தகராறில் ஈடுபட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சாத்தாவட்டம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீக்குளித்ததாக கூறப்படும் இளைஞர் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தாம் குறிப்பிட்ட சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் பெயர்களையும் அவர் கூறியுள்ளார். ஆனந்த் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ஆனந்தின் மரணத்திற்குக் காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஒரு தரப்பினர் ஆனந்த் தனக்குத்தானே தீ வைத்ததாகக் கூறிவரும் நிலையில், ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆனந்தை சிலர் தீ வைத்து எரித்ததாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், போலீசார் சமாதான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.