சனி, 25 நவம்பர், 2017

பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு November 25, 2017

Image

தொழிலதிபர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க நடந்த சதிதிட்டமே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 2-ம் கட்ட பிரச்சாரத்தை ராகுல்காந்தி போர்பந்தரில் நேற்று தொடங்கினார். அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார். காங்கிரஸ் ஆட்சியில், மீனவர்களுக்கு 25 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்ட டீசல், பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும் மீனவர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, தமது தொழிலதிபர் நண்பர்களுக்கு துறைமுகங்களை பிரதமர் மோடி பரிசாக அளித்து விட்டதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். தொழிலதிபர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க நடந்த சதிதிட்டமே மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து போர்பந்தரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தற்போது வரை பணக்காரர்களுக்காக மட்டுமே பாஜகவின் கதவுகள் திறந்துள்ளதாகவும், ஏழைகளின் குரல் ஆட்சியாளர்களை சென்று அடையவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.