வெள்ளி, 24 நவம்பர், 2017

இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது ஏன்? November 24, 2017

Image

இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

➤இந்திய தேசிய காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது சாதிக் அலி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதம் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

➤பெரும்பான்மை ஆதரவு என்கிற வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 34 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை ஓ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்தனர் என்றும், தமிழக எம்.எல்.ஏக்கள் 111 பேர் மற்றும் புதுவை எம்.எல்.ஏக்கள் 4 பேர் என 115 எம்.எல்.ஏக்கள், ஓபிஎஸ் அணியினருக்கு ஆதரவாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

➤ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கடந்த செப்டம்பர் 12ந்தேதி கூட்டிய பொதுக்குழுவிற்கு பின் 1877 பொதுக் குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் அந்த அணிக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டதும் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

➤சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கட்சி சின்னத்தை முடிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை வாதத்தை டிடிவி தினகரன் அணியினர் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

➤மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

➤சசிகலாவிற்கு ஆதரவாக பிரமாண பத்திரங்களை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தவர்கள், பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அதற்கு மாறாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது பற்றி டிடிவி தினகரன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

➤ஒ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் 10 போலி பிரமாணப் பத்திரங்கள் அடங்கியிருப்பதாக தினகரன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரங்களையும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே இந்த உண்மை விளங்கும் என்றும் டிடிவி தினகரன் அணி சார்பில் வாதிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

➤ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பலரிடம் மிரட்டி பிரமாணப் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

➤பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து சுமார் 2000 பிரமாணப் பத்திரங்கள் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம், அவற்றில் 10 போலி ஆவணங்கள் இருப்பதாக எழுப்பப்படும் புகாரை கொண்டு பிற பிரமாணப் பத்திரங்களை நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

➤தங்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டவர்களின் பிரமாணப் பத்திரங்களை மட்டுமே சாட்சியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பில்  வாதிடப்பட்டதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

➤உள்கட்சி பிரச்னைகளில் காலத்திற்கு ஏற்ப நிகழும் மாற்றங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சார்பில் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எடுத்துரைக்கப்பட்ட வாதம் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

➤மொத்தம் உள்ள 2128 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டதாகவும்

தினகரன் தரப்பில் தாக்கலான 1280 பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

➤பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை கட்சித் தொண்டர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக கருதி இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் அவைத்தலைவராக உள்ள அணிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

➤அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,

➤இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து கடந்த மார்ச் 22ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

➤அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரும், அக்கட்சியின் கொடியும், சின்னமும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கே சொந்தம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

➤ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இரட்டை இலை விவகாரத்திலும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.