சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், வளாகத்திற்கு தீயிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கணினியியல் முதலாம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ராக மோனிகா, கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது சக மாணவியைப் பார்த்து காப்பி அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ராகமோனிகாவை கண்டித்த ஆசிரியர், தேர்வு அறையை விட்டு அவரை வெளியே அனுப்பியுள்ளார். இதனையடுத்து, விடுதிக்குச் சென்று ராகமோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய செம்மஞ்சேரி போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலாம் ஆண்டு மாணவி ராகமோனிகாவின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என குற்றம் சாட்டிய விடுதி மாணவர்கள், கல்லூரி வளாகத்தை தீயிட்டு கொளுத்தினர். மேலும், மின்விளக்கு, பேருந்து, நூலாக கட்டட கண்ணாடிகள் முதலியவற்றை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி வளாகத்தினுள் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி வளாகத்திற்குள் குவிக்கப்பட்டு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் விடுதிக்கு திருப்பி அனுப்பினார்.