தமிழகத்தில் ஆன்லைன் வரத்தகம் மூலம் நூதன முறையில் விவசாயிகளிடம் அரிசி, மிளகு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பெற்று பணமோசடி செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த முறை மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து, திருவள்ளூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கமால் அவதிபடுவதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நூதன மோசடி செய்திடும் கும்பலின் நடவடிக்கை தற்போது தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிந்தலகுப்பம் கிராமத்தில், "கீரின் டிரேடிங்" என்ற நிறுவனத்தை முஸ்தபா முகமது செரிப் என்பவர் நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மையத்தில் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளிடம் ஆன்லைன் முறையில் விவசாய விளைப்பொருட்களை பெற்று, வெளி மாநிலங்களுக்கு நல்ல விலைக்கு விற்று தருவதாக விளம்பர படுத்தியுள்ளனர்.
இவர்களின் செயலை நம்பி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த வடமலை என்ற விவசாயி, கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆண் தேதி ஆன்லைன் மூலம் 2 டன் எடையுள்ள மிளகை விற்றுள்ளார். இதற்கு 2 லட்ச ரூபாயினை மட்டுமே முன்பணமாக வழங்கிய இந்நிறுவனம், மீதமுள்ள நிலுவை தொகை 9 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் தராமல் தலைமறைவாகினர். இது குறித்து விவசாயி வடமலை அளித்த புகாரின் பேரில், மதுரையை சேர்ந்த முகமது மாலிக், கேரளாவை சேர்ந்த வஜிம், சென்னை அரும்பாக்கம் அப்பாஸ் ஆகிய 3 பேரை கடந்த 24 ஆம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சென்னை ஜே-ஜே நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவரிடமும் 8 லட்சரூபாய் மதிப்பிலான பத்து டன் அரிசியை ஆன்லைனில் வாங்கி கொண்டு இதே கும்பல் ஏமாற்றி மோசடி செய்ததாக கும்மிடிபூண்டி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தவிர தமிழகம் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பண்டாரி, மஞ்சள் வியபாரியிடம் 18லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 டன் மஞ்சளை பெற்று அவரை பணம் தராமல் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான "முஸ்தபா முகமது செரிப்" என்பவரை கைது செய்தால் மட்டுமே, இக்கொள்ளை கும்பலின் மோசடி நடவடிக்கைகள் முழுவதும் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிகவிலை கிடைக்கிறது என்பதற்காக ஆன்லைனில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாந்திடமால், மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முற்றிலுமாக தடுக்கமுடியும்.