சரக்கு மற்றும் சேவை வரி எதிரொலியாக உயிர் காக்கும் அரிய வகை மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரிய வகை மரபியல் நோய்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
சிப்ரின், வெங்கலெக்ஸ்டா, அட்செட்ரிஸ் போன்ற அந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த பல லட்ச ரூபாயை நோயாளிகள் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அறிமுகமான சரக்கு மற்றும் சேவை வரியால் இந்த மருந்துகளுக்கு கூடுதலாக 12 சதவீதம் வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் அந்த அரிய வகை மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.